சனாதன எதிர்ப்பு பேச்சு போட்டி வாபஸ்
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் அருகே கல்லூரியில் மாணவர்களுக்கு சனாதன எதிர்ப்பு பேச்சு போட்டி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா போன்ற உயிர்கொல்லி நோய்களை அழிப்பது போன்று சனாதானத்தையும் ஒழிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் ஆதரவு ஒருபுறமும், பாஜக மட்டுமின்றி பல்வேறு இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பிரச்சனையே ஓயாத நிலையில், திருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரி முதல்வர் ராஜாராமன் மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், “திருவிக அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துக்களை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி மாலை 3 மணி அளவில் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் மாணவர்கள் பேச வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், சுற்றறிக்கையை மாற்றி கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், “இக்கல்லூரி சுற்றறிக்கை நாள் 12.09.2023ல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதனம் பற்றிய தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது எனினும் கல்லூரி மாணவிகள் அக்கருத்துக்களை முதல்வரின் சுற்றிக்கையின்படி அல்லாமல், தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே மேற்காண் பொருள் குறித்து செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.