EX எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

 
ச் ச்

பண்ருட்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் இரவிலும் தொடர்ந்து 17 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனை இரவு 11 மணியளவில் நிறைவு பெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் 2016-21 சட்டமன்ற உறுப்பினராக சத்யா பன்னீர்செல்வம் இருந்து வந்தார். இவர் தற்போது அதிமுகவின் மாநில மகளிர் அணி துணை செயலாளராக செயல்பட்டு வருகிறார். முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் காலை 6 முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர் . சத்யா பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர், இந்த வழக்கின் அடிப்படையில் சத்யா பன்னீர்செல்வம் பண்ருட்டி வீட்டில் தற்போது கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். மேலும் சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் 2011-2016 வரை பண்ருட்டி நகர மன்ற தலைவராக இருந்த போது ஊழல் புரிந்ததாக கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மீது புதிய வழக்கு பதிந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் சோதனையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து அவரை கார் மூலம் கடலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Image

இந்நிலையில் காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது தொடர்ந்து இரவிலும் 17 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொள்வது கடலூர் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.