#BREAKING கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத், அரசு ஊழியர்கள், தனி நபர்கள், நிறுவனங்கள் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள FIR வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு நடந்ததாகவும், ஏலதாரர்களிடம் இருந்து கட்சி நிதி பெறப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களிடம் 10% வரை கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் பெற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த வாரம் கே.என்.நேரு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. சென்னை, திருச்சி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், டெண்டர் முறைகேடு தொடர்பாக 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடதக்கது.

