ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை

 
online game

சென்னை கே.கே.நகரை சேர்ந்த சுரேஷ், கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமானதாக அவரது மனைவி புகார் அளித்திருந்த நிலையில் மெரினா கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சென்னை கே.கே. நகர் 14-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). வடபழனியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராதா, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்ற சுரேஷ் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. 

அவர் விட்டு சென்ற செல்போனை ராதா ஆய்வு செய்தபோது "ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டேன், நான் வாழ தகுதியற்றவன் எனவே தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என கடிதம் எழுதி அதை செல்போனில் படம் பிடித்து வைத்துவிட்டு சென்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கே.கே நகர் போலீசில் ராதா புகார் அளித்தார். முதல் கட்ட விசாரணையில் சுரேஷ் கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வருவதும், இதன் மூலம் ரூ.16 லட்சம் பணத்தை அவர் பறி கொடுத்து இருப்பதும் தெரிந்தது. மேலும் தனது நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கியும், ரம்மி விளையாடி பணத்தை பறி கொடுத்துள்ளார்.  இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், திடீரென கடிதம் எழுதி வைத்துவிட்டு சுரேஷ் மாயமானார். புகாரின் அடிப்படையில் சுரேஷை போலீசார் தேடிவந்த நிலையில், அவரது உடல் மெரினா கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.