மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மற்றொரு கடிதம் வெளியீடு!

 
1

காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தனசிங், உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் அவரது உடலை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். உடல் கண்டெடுக்கப்பட்டப் பகுதியை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், ஜெயக்குமார் தனசிங் எழுதிய மற்றொரு கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “அன்பு மருமகன் ஜெயபாலுக்கு என 4 பக்க கடிதத்தை எழுதியுள்ளார்” காலஞ்சென்ற காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங். அந்த கடிதத்தில், “எனக்கு 16 நபர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை குடும்பத்தினர் யாரும் பழிவாக வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும்; மகளின் திருமணத்தை அனைவரும் சிறப்பாக நடத்திக் கொடுத்தீர்கள்; என் அன்பு உங்கள் மீது எப்போதும் உண்டு. மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்டால் என்னை மன்னிக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100- க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., “ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. ஜெயக்குமார் தனசிங் உயிரிழந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடக்கிறது. காங்கிரஸ் கட்சி ரீதியாக விசாரணை நடத்தி அறிக்கையை கட்சி தலைமையிடம் கொடுப்போம். குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். அரசியல் பின்புலத்தோடு இருந்தாலும் நடவடிக்கை உறுதி என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.