புதுச்சேரியில் டெங்குவால் மற்றொரு இளம்பெண் உயிரிழப்பு

 
dengue

புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள சூழ்நிலையில், இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

புதுச்சேரியில் கடந்த சில மாதமாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 1,200-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர். இந்நிலையில் குருமாம்பேட் வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவி காயத்ரி(19) என்பவர் கடுமையான காய்ச்சல் காரணமாக மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 ம்தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில் இன்று உயிரிழந்தார். அவர் டெங்குவினால் உயிரிழந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மீன ரோஷினி (28).இவர் கடுமையான காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் காய்ச்சல் காய்ச்சல் குணமாகவில்லை. அதையடுத்து மேல் சிகிச்சைக்காக  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரும் உயிரிழந்தார். டெங்கு பாதிப்பினால் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

டெங்கு காய்ச்சலால் இரு பெண்கள் உயிரிழந்த மேட்டுப்பாளையம், குருமாம்பேட் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் முழு வீச்சில் களம் இறக்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கும் டெங்கு பாதிப்பு உள்ளதால் என பரிசோதனை நடந்து வருகின்றனர். அப்பகுதியில் கொசு மருந்து தெளிப்பு பணியும், டெங்கு கொசு ஒழிப்பு பணியும் முழு வீச்சில் நடந்து வருகின்றது.