திருத்தணி ரயில் நிலையத்தில் மீண்டும் ஒருவர் மீது தாக்குதல்! நடந்தது என்ன?
திருத்தணி இரயில் நிலையத்தில் பிஸ்னஸ் மேன் ஒருவர் தாக்கப்பட்டதாக காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபரை போலீசார் விசாரணை செய்ததில் உண்மை தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் போலீசாரிடம் தெரிவிக்கையில், “தான் பழைய புடவை வாங்கி விற்கும் வேலை செய்பவர் என்றும் தன்னுடைய நண்பர் பகிருதீன் என்பவருடன் சேர்ந்து கமலா தியேட்டர் அருகே 50 மீ தொலைவில் உள்ள TASMAC கடையில் மது வாங்கி மது அருந்தியதாகவும், மது போதையில் தான் மட்டும் சிறுநீர் கழிப்பதற்காக திருத்தணி இரயில் நிலைய நடைமேடை எண். 1 ன் வடக்கு பக்கம் வந்தேன். தான் இரயிலில் பயணம் செய்வதற்காக வரவில்லை. அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்களிடம் மது போதையில் ஏதோ பேசினேன். அவர்களில் ஒருவர் என்னை கோபத்துடன் கையால் அடித்தான். அதனால் தான் கீழே விழுந்துவிட்டேன். அதனால் சிறு காயங்கள் ஏற்பட்டது. தான் மதுபோதையில் இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று பின்னர் வீட்டிற்கு சென்றுவிட்டேன்” என்றார்.
இது குறித்து அரக்கோணம் இ.பா. காவல் நிலைய குற்ற எண். 279/2025 பிரிவு 296(b),118 (i) & 351 (iii) BNS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சம்பவத்தில் தாக்கிய நபர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் விதத்தில் வந்ததாக தெரியவில்லை. மேலும் எதிரிகள் அவரை கையால் அடித்ததாக தெரியவருகிறது. மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டி இருப்புப்பாதை காவல் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர், அரக்கோணம் இருப்புப்பாதை காவல் நிலையம் அவர்கள் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


