அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்: யாரோ செஞ்ச தப்பு.. என்னை பலிகடா ஆக்கிட்டாங்க - புலம்பும் பாஜக நிர்வாகி

 
tn

அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தன்னை பலிகடா ஆக்கிவிட்டதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஜக மண்டல தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.  

அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி,  தொழிலதிபர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள்,  பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல் தலைவர் சதீஷ் ,  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து  நீக்கப்பட்டிருக்கிறார். சதீஷ் பதவியில் இருந்து நிக்கப்படுவதாக மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் அறிக்கை வெளியிட்டார்.  இது அக்கட்சியினர்  இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. 

அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்:  யாரோ செஞ்ச தப்பு..  என்னை பலிகடா ஆக்கிட்டாங்க -  புலம்பும் பாஜக நிர்வாகி 

இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாஜக சிங்காநல்லூர் மண்டல் தலைவர் சதீஷ், இந்த விவகாரத்தில் தான் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.  இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “ கடந்த 20 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளேன்.  கிளை தலைவர், வார்டு பொறுப்பாளர் என படிப்படியாக வளர்ந்து மண்டல தலைவராகி உள்ளேன். இதுவரை எந்த குற்றச்சாட்டும் என் மீது இருந்தது இல்லை.  இந்த நிலையில் இன்று காலை அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக என்னை கட்சியில்  இருந்து நீக்கியதாக அறிவித்துள்ளனர்.  இதில் உண்மையாக நடந்தது அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன்,  அமைச்சர் நிர்மலா சீதாராமனை  சந்திக்க சென்றபோது அது தனித்துவமான சந்திப்பாக இருந்தது.  மொத்தமாக நான்கு பேர்  மட்டுமே இருந்தனர்.  

அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்:  யாரோ செஞ்ச தப்பு..  என்னை பலிகடா ஆக்கிட்டாங்க -  புலம்பும் பாஜக நிர்வாகி 

அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  வானதி சீனிவாசன் மற்றும் மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் மட்டுமே.  எனவே வீடியோ வெளியிட்டது யார்? இப்படி ஒரு   "ஃபார்வேர்டு மெசேஜ்" வந்தது.  அதனை நிர்வாகிகளிடம் கேட்க நானும் பார்வேர்ட் செய்தேன். இதை கட்சி விரோத செயல்பாடு எனக் கூறி கட்சியிலிருந்து நீக்கி உள்ளனர். சந்தேகத்திற்காக நிர்வாகியிடம் கேட்க அனுப்பிய தகவலை வைத்து கட்சி விரோத நடவடிக்கை எனக் கூறி நீக்கி உள்ளனர்.  அப்போது வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் யார்?  அவர்கள் மீதும் இதே நடவடிக்கை தொடருமா?  கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் மாநிலத் தலைவர் தமிழ்நாடு வந்தவுடன் அவரை நேரில் சந்தித்து கட்சியில் மீண்டும் இணைந்து பணியாற்றுவேன்.  அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக மாவட்ட தலைவர் செய்த தவறை மறைக்கவும்,  அவர் தப்பித்துக் கொள்ள என்னை பலிகடா ஆக்கியுள்ளனர். 

tn

மேலும் நேற்று இரவு 9:30 மணிக்கு அந்த பதிவை நிர்வாகிகள் குழுவில் போட்டேன்,  15 நிமிடங்களில் அதனை அழித்துவிட்டேன்.  ஆனாலும் காலை 10 மணிக்கு என்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டதாக அறிக்கையை கொடுத்தனர்.  20 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன்,  எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியிலிருந்து நீக்கி உள்ளது வேதனை அளிக்கிறது. வீடியோ வெளியான விவகாரத்தில் மாநில தலைவருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அங்கு இருந்தது நான்கு பேர்,  வீடியோவில் மூன்று பேர் உள்ளனர்.  நான்காவதாக உள்ளது மாவட்ட தலைவர் மட்டும்தான். எனவே யார் வீடியோ எடுத்து இருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.  இந்த விவகாரம் தொடர்பாக ஐவர் குழுவிடம் முறையிட உள்ளேன். மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் வந்த பிறகு நேரில் அவரிடம் விளக்கம் அளிப்பேன். தொடர்ந்து பாஜகவிற்கு மட்டுமே பணியாற்றுவேன்” என்று  தெரிவித்தார்.