கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை- அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

 
அண்ணாமலை அமித்ஷா

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம்  குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. ஷேஷேசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 24 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளன்ர. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேர் என இதுவரையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சியில் திமுகவினர் துணையுடன் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், அரசு அலுவலகங்கள் அருகிலேயே சாராயம் விற்றுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். திமுக அரசின் செயல்பாடின்மையால் 2 ஆண்டுகளில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 60-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மாநில அரசு விசாரித்தால் முழுமையான தகவல் தெரியவராது” எனக் குறிப்பிட்டுள்ளார்.