விவசாயிகளை கைது செய்யும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

 
annamalai mkstalin

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கைது செய்து, சிறையில் அடைக்க திமுக அரசு முடிவு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக, தனது 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி எண் 65 மற்றும் 66ல், தென்னையில் இருந்து கிடைக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை, தமிழக அரசுக் கூட்டுறவு நிறுவனங்களே கொள்முதல் செய்யும் என்றும், கொப்பரைத் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் என்றும் கூறியிருந்ததை, மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் இன்று தொடங்கியிருக்கிறது. 

Annamalai

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திரு ஈசன் முருகசாமி, கள் இயக்கத்தை சேர்ந்த திரு. நல்லசாமி, தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நற்பமைப்பு செயலாளர் திரு. செல்லதுரை, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. P. ரவீந்திரன், ஈஸ்ட் கோஸ்ட் விவசாயிகள் கூட்டமைப்பு திரு. காந்தி, விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் திரு. பிகே பத்மநாபன், ஆனைமலை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் திரு. திரு தனபால், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் திரு. திரு ஜெயமணி ஆகிய விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5 அன்று, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பாக, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. தொடர் வலியுறுத்தல்களுக்குப் பிறகு, கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.  ஆனால் இதுவரை, நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய, திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, வெளிநாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, சத்துணவுத் திட்டத்திலும், பொது விநியோகத்திலும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிக்கை விட்டதை, தான் ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிட்டு, தென்னை விவசாயிகள் நலன் குறித்து சிறிதும் அக்கறையின்றி இருக்கிறார்.


விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கைது செய்து, சிறையில் அடைக்க முடிவு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதியைக் குறைத்து, தமிழக விவசாயிகள் பலனடையும் வண்ணம், நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதைத் தடுப்பது எது என்று திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.  தமிழகத்தில் உள்ள பல லட்சம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட, தென்னை விவசாயம் செழிக்க, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், விவசாயிகளைக் கைது செய்யும் முடிவை, உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.