ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஒரு வாரத்தில் நிறைவேற்றவேண்டும்- அண்ணாமலை

 
Annamalai

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு (TET) ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கங்கள் ஒன்றிணைந்து, திமுக தேர்தல் வாக்குறுதி 177-ஐ நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பை  57 வயதாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டவர்கள்  5ஆவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அமைச்சர் பொன்முடி நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

Image

போராட்டத்தில் ஈடுபடுவோரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், “ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணி நியமனத்திற்காகப் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியப் பெருமக்களை நேற்று நேரில் சந்தித்திருந்தேன். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சென்னைக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் துயரங்கள் மிகவும் வருத்தத்துக்குரியது. ஆசிரியப் பணியை நோக்கமாகக் கொண்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும், பல ஆண்டுகள் காத்திருந்தும், அதற்கான பலன் கிடைக்காமல், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.


அமைச்சர் பொன்முடி அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியப் பெருமக்களை நேரில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வாரத்திற்குள்ளாக அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென்று, அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.