திமுகவினர் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்- அண்ணாமலை

 
Annamalai

வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைய என் மண் என் மக்கள் பயணத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவதாண்டேஸ்வர் கோவில் அமைந்திருக்கும் மிகவும் அருமையான குன்னம் தொகுதியில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது கொண்ட அன்பினை, பெரும் திரளெனக் கூடி பொதுமக்கள் வெளிப்படுத்தினர். மனித வளர்ச்சிக் குறியீட்டின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியின் அவலங்களில் இதுவும் ஒன்று. ஆனால், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் குறுநில மன்னராக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். 

போக்குவரத்துத் துறையில் மட்டும் 2,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது என்று #DMKFiles 2 -ல் குற்றச்சாட்டு வைத்தோம். திமுக முதல் குடும்பத்துக்குக் கப்பம் கட்டிவிட்டு, தனது வசூல் வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் அமைச்சர். சமூக நீதி என்று வேடமிட்டுத் திரியும் திமுகவில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குன்னம் தொகுதி செந்துறை பாஜக தெற்கு ஒன்றியச் செயலாளர், சகோதரர் அன்பரசன், தனது வீட்டில் நடைபெற்ற விழாவில் பட்டாசு வெடித்ததாகக் கூறி, வாளரக்குறிச்சி திமுக கிளைச் செயலாளர் கண்ணன் என்பவரும் அவருடன் இருந்தவர்களும், காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்தியுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. பட்டியல் சமுதாய மக்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட 10,000 கோடி ரூபாய் நிதியை செலவிடாமல் திருப்பி அனுப்பினர். சேலத்தில் ஒரு பட்டியல் சகோதரரை கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டினர். கள்ளக்குறிச்சியில் பட்டியல் சமுதாய மக்களை கொடி ஏற்ற விடாமல் தடுத்தனர்.

Image


பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில், கலந்து கொள்ள வந்த பெரம்பலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மீதும், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதும், செய்தியாளர்கள் மீதும், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் உள்ளிட்ட திமுகவினர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். மணல் கடத்தலைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்படும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. தற்போது, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்கு, திமுகவினர் கொண்டு வந்துள்ளனர்.

தமிழக மின்சார வாரியத்தின் அனல் மின் நிலக்கரி திட்டத்திற்கு ஜெயங்கொண்டம் பகுதியில் 25 வருடங்களுக்கு முன்பு கையகப்படுத்திய 8,373 ஏக்கர் நிலத்தில், ஒரு செங்கலை கூட வைக்காமல், கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் அரசு திரும்ப ஒப்படைத்துள்ளது. இதே போல, 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதிகளில், விவசாயிகளுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்டது. இன்று வரை இந்த பொருளாதார சிறப்பு மண்டலத்தில் ஒரு செங்கலை கூட வைக்கவில்லை. கொடுத்த விவசாய நிலம் இப்போது தரிசு நிலம் ஆகிவிட்டது. வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி விட்டு, பத்து வருடத்திற்குப் பிறகு, விவசாயிகளுக்கு நிலத்தை தரிசாகத் திருப்பி கொடுப்பார்கள்.

Image

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, பெரம்பலூர் மாவட்டத்தில், 16,772 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 87,516 வீடுகளில் குழாயில் குடிநீர், 83,439 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 39,531 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 71,117 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 75,208 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 873 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. ஆனால் திமுக, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான செந்துறையை ஊராட்சியில் இருந்து பேரூராட்சியாக நிலை உயர்த்தல், குன்னத்தில் மருத்துவக் கல்லூரி, குன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தல் உள்ளிட்ட எந்த ஒரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மூன்று வருடங்களாக மக்களை வஞ்சித்து வருகிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.