நெல்லையில் சாதியத் தாக்குதல் - அண்ணாமலை கண்டனம்

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சாதி வெறித் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக பட்டியலின இளைஞர்கள் இருவரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல், அவர்களின் ஆடைகளை களைந்து, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்திருக்கிறது. அவர்கள் வைத்திருந்த பற்று அட்டையை பறித்து அதிலிருந்து ரூ.5000 பணத்தை கொள்ளையடித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் அவர்களிடமிருந்து தப்பி, ஆடைகள் இன்றி வீடு திரும்பியுள்ளனர்.
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப் பகுதியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மீது, ஜாதியைக் கேட்டு ஒரு கும்பல் கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தியதோடு, இருவரையும் நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமையில் ஈடுபட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த மனிதத் தன்மையற்ற செயலில் ஈடுபட்டவர்களை தமிழக பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜாதிய ரீதியிலான குற்றங்கள் நடக்காமல் தடுத்து நிறுத்துவதும், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் அரசின் கடமை. மாதம் ஒரு குற்றம் நடந்த பிறகு, கோபாலபுர அரசியல் வாரிசுகளில் ஒருவரை அனுப்பி வசனம் பேசி சமாளிப்பது, நிரந்தரத் தீர்வு தராது என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.