கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து நாளை மறுநாள் பாஜக போராட்டம்- அண்ணாமலை

 
annamalai

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து  22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 

Annamalai

இதையடுத்து கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில்  மாநிலம் முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த வேண்டுமெனவும், சாராயம் விற்பனையில் ஈடுபடுபவகளை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.   அதன்படி மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் இறங்கியுள்ள போலீஸார்,  அந்தந்த மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்து , கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து பாஜக போராட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பாஜக வரும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். இந்த கண்டன போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளச்சாராய மரணங்கள், சட்டம், ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அதிமுக சார்பில் வரும் 22 ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.