“விரைவில் பொறுப்பு வழங்கப்படும்”- அண்ணாமலை பரபரப்பு அறிக்கை
‘We the leaders’ இயக்கத்தில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து விரைவில் பொறுப்புகள் வழங்கப்படும் என பாஜகவில் இருந்து விலகி தனி இயக்கம் ஆரம்பித்துள்ள அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது ‘We the leaders’ இயக்கம் உங்கள் அனைவரின் பேரன்மையும், ஆதரவையும் துணையாக கொண்டு தொடங்கப்பட்ட மூன்று நாட்களில் 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கி கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
இது சிறு தொடக்கம் மட்டுமே ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில் நான் உட்பட அனைவருமே இந்த பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர யாருக்கும் எந்த பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களை ்்தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததை போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே ‘We the leaders’ இயக்கம் ஈடுபடும்.
இந்த சூழலில் சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாக தெரிய வருகிறது. மேலும் மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது ‘We the leaders’ இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இதுபோன்ற செயல்பாடுகளால் நீர்த்துப் போய்விடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

