உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- அண்ணாமலை
காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த துயரச் சம்பவத்தில் மீனவர்களின் பாதுகாப்பில் புதிய அணுகுமுறையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உரிய வாழ்வாதார உத்தரவாதமும் அவசியம் என வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது மீனவர்கள், முரசு புயலின் தாக்கத்தால் நடுக்கடலில் சிக்கி உயிரிழந்தது மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீனவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு இந்தத் துயரமான நேரத்தில் அரசும் சமூகமும் உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவத்தை ஒரு இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்து என்று மட்டும் கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில், இது நமது கடல்சார் பாதுகாப்பு ஏற்பாடுகள், மீனவர்களுக்கான அவசரகாலத் தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
படகுகளும் பாதுகாப்பான புயல் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பின்னர், கடலில் இருந்த அனைத்து மீன்பிடிப் இடங்களை அடைந்துவிட்டனவா என்பதை உறுதிப்படுத்தும் கண்காணிப்பு முறை, ஆழ்கடலில் சிக்கியுள்ள மீனவர்களின் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறியத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட தற்போதைய நடைமுறைகளில் உள்ள சவால்களை அடையாளம் கண்டு, நிர்வாகச் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஏழு லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். மேலும், உடனடி நிவாரணமாகத் தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த உடனடி உதவி வரவேற்கத்தக்கது. நிவாரணம் என்பது உடனடி உதவி. வாழ்வாதாரப் பாதுகாப்பு என்பது நீண்டகாலப் பொறுப்பு. ஒரு குடும்பத்தின் பிரதான வருமான ஆதாரமாக இருந்த மீனவர் உயிரிழக்கும்போது, அந்தக் குடும்பம் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமை, சில லட்சம் ரூபாய்களுடன் முடிந்துவிடுவதில்லை. குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் அன்றாடத் தேவைகள், மருத்துவச் செலவுகள், கடன் சுமைகள் எனப் பல ஆண்டுகளுக்கான பொறுப்புகள் அந்தக் குடும்பத்தின் மீது விழுகின்றன.
எனவே, உயிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா 50 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதில், 25 இலட்சம் ரூபாயை உடனடி நிவாரணமாக வழங்குவதுடன், மீதமுள்ள 25 இலட்சம் ரூபாயை அந்தந்தக் குடும்பத்தினரின்பெயரில் நீண்டகால வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும். அந்த வைப்புத் தொகையின் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய், குடும்பத்தின் அன்றாடத் தேவைகள், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு நிலையான நிதி ஆதாரமாக அமையும். மேலும், குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பாதுகாக்கும் வகையில், தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாட்டையும் உருவாக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான கல்விச் செலவுகளுக்கு அரசு சிறப்பு உதவித்திட்டம் ஒன்றையும் அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் மீனவச் சமூகம் நாட்டின் உணவுப் பொருளாதாரத்திற்கும், கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது. அவர்களின் உழைப்பு என்பது ஒரு தொழில் சார்ந்த பங்களிப்பு மட்டுமல்ல; அது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் வாழ்வாதாரமும் அடையாளமும் ஆகும். இயற்கைப் பேரிடர்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அவற்றை எதிர்கொள்ளும் நமது தயார்நிலையை மேம்படுத்த முடியும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிய முடியும். துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த முடியும். சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். இந்தத் துயரச் சம்பவத்தை ஒரு தனிப்பட்ட விபத்தாக மட்டும் அணுகாமல், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீனவப் பாதுகாப்புக் கொள்கையை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பாக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை நிவாரண அடிப்படையில் அல்லாமல், கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் அணுக வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதற்காக, தமிழ்நாடு அரசு சில நீண்டகால நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
1. ஒருங்கிணைந்த கடல்சார் கண்காணிப்பு அமைப்பு
தமிழ்நாட்டிலிருந்து கடலுக்குச் செல்லும் அனைத்து விசைப்படகுகளின் புறப்பாடு, இருப்பிடம், பயணப் பாதை மற்றும் பாதுகாப்பான துறைமுகத்தை அடையும் நிலை ஆகியவற்றைக் கண்காணிக்கும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக, புயல் மற்றும் கடுமையான வானிலை எச்சரிக்கைகள் வெளியாகும்போது இந்தக் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
2. அவசரகாலத் தகவல் தொடர்பு வசதிகள்
மற்றும் ஆழ்கடலில் செல்போன் தொடர்பு கிடைக்காத சூழல்களிலும், மீனவர்கள் அவசர உதவி கோரக்கூடிய வகையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்புக் கருவிகள், அவசர அபாய அறிவிப்புக் கருவிகள் இருப்பிடத்தைக் கண்டறியும் சாதனங்கள் அனைத்து விசைப்படகுகளிலும் படிப்படியாக நிறுவப்பட வேண்டும். இதற்கான செலவில் அரசு மானியமும் வழங்க வேண்டும்.
3. விரைவான மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம்
மீன்வளத்துறை, கடலோரக் காவல்படை, கடல்சார் மீட்பு அமைப்புகள் மற்றும் அண்டை மாநிலங்களின் தொடர்புடைய துறைகளை இணைக்கும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் ஒருங்கிணைந்த மீட்பு மற்றும் தகவல் தொடர்பு மையம் அமைக்கப்பட வேண்டும். அவசர அழைப்பு கிடைத்தவுடன் யார் நடவடிக்கை எடுக்க வேண்டும், எந்த அமைப்பு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான தெளிவான செயல்முறை உருவாக்கப்பட வேண்டும்.
4. மீனவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பயிற்சி
விசைப்படகுகளின் இயந்திரங்கள், வழிகாட்டும் கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் உயிர்காக்கும் உபகரணங்கள் முறையாகப் பரிசோதிக்கப்பட வேண்டும். புயல் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், அவசரநிலையில் எந்தத் துறையைத் தொடர்புகொள்ள வேண்டும், உயிர்காக்கும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
5. மீனவக் குடும்பங்களுக்கான சமூகப் பாதுகாப்பு
கடலில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைப்பதோடு, காப்பீடு, குழந்தைகளின் கல்வி, குடும்ப உறுப்பினர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய விரிவான சமூகப் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். மத்திய அரசின் மீனவர் நலத்திட்டங்களுடனும் மாநில அரசின் நலத்திட்டங்களுடனும் ஒருங்கிணைந்து, தகுதியுள்ள அனைத்து மீனவர்களுக்கும் காப்பீட்டுப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
6. மீனவர் பாதுகாப்பு குறித்த ஆண்டு அறிக்கை
கடலில் நிகழும் விபத்துகள், மீனவர் உயிரிழப்புகள், காணாமல் போனவர்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிவரங்களுடன், ஆண்டுதோறும் மீனவர் பாதுகாப்பு அறிக்கையைத் தமிழக அரசு வெளியிட வேண்டும். இதன்மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறனை மதிப்பீடு செய்து, தேவையான மேம்பாடுகளை மேற்கொள்ள முடியும். எனவே, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் நிதியுதவியை அறிவித்து, அதில் 25 இலட்சம் ரூபாயை உடனடியாக வழங்குவதோடு, மீதமுள்ள 25 இலட்சம் ரூபாயை அந்தந்தக் குடும்பத்தினரின் பெயரில் நீண்டகால வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும். மேலும், தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, குழந்தைகளின் கல்விக்கான சிறப்புத் திட்டம் ஆகியவற்றை அறிவிப்பதுடன், மீனவர்களின் உயிரைப் பாதுகாக்கும் நீண்டகாலத் திட்டத்தையும் குறிப்பிட்ட காலக்கெடுவுடன் செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். இத்தகைய துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளும் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

