‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மோடியின் ஆசை, கனவு- அண்ணாமலை

 
Annamalai

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள  வெட்டன்விடுதியில் மேற்கு மாவட்ட பாஜக பொருளாளர் முருகானந்தம் இல்ல திருமண விழாவில்  தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மேலும் இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Annamalai

திருமணவிழா மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது பிரதமர் மோடியின் ஆசை, கனவு. 1952, 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் ஒரே தேர்தலாகத்தான் நடைபெற்றது. சுதந்திரம் கிடைத்ததற்கு பிறகு 20 ஆண்டுகள் நாட்டில் ஒரே தேர்தல் தான் நடந்தது. பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் ஆர்டிகல் 356-ஐ பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியை தொடர்ந்து கலைத்ததால் தனியாக தேர்தல் நடக்க ஆரம்பித்து தற்போது ஒரே ஆண்டில் 7 தேர்தல் நடத்த கூடிய நிலையில் உள்ளது. 

அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தும் பணிக்கு 6 மாதத்திற்கு முன்பே ஆட்சியர் முதல் அங்கன்வாடி ஆயமா வரை கிளம்பிவிடுகின்றனர். தேர்தல் நடத்துவதற்கே நேரம் சரியாக உள்ளது. அப்புறம் எப்படி அரசு அதிகாரிகள் மக்கள் பணி ஆற்றுவார்கள். அடிக்கடி நடத்தும் தேர்தலால் அரசு அதிகாரிகளின் பணி பாதிக்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் தேசிய கொள்கையின் அடிப்படையில் தேர்தல் நடக்கும். மக்கள் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்க வேண்டும். நாடு அடுத்த கட்டம் முன்னேற வேண்டும் என்றால் தேர்தல் நாடாக இருக்க கூடாது. 5 ஆண்டுகள் சேவை செய்வதாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் 4 வருடம் கொள்ளை அடிக்கின்றனர், அதன் பின் தேர்தலில் கொள்ளை அடித்த பணத்தை மக்களுக்கு கொடுக்கின்றனர், ஏழை மக்கள் ஏழையாகவே இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் நடுத்தர மக்களாகவே இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் போது இரு போன்ற பிரச்சனை இருக்காது” என்றார்.