20 ரூபாய் கொடுத்து 150 ரூபாய் பறிக்கும் திமுக அரசு - தி.மு.க அரசை விளாசிய அண்ணாமலை!

 
1

.சென்னை, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி பா.ஜ., சார்பில், 'நாளை நமதே தமிழ்நாடும் நமதே' என்ற தலைப்பில், சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

இதில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: சென்னையின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பெயரளவில் மட்டுமே, வி.ஐ.பி., தொகுதியாக உள்ளது. துணை முதல்வர் உதயநிதி தொகுதியாக இருந்தாலும்கூட, இங்கு அடிப்படை கட்டமைப்புகள் கூட மேம்படுத்தப்படவில்லை.தி.மு.க.,வை பொறுத்தவரை, சென்னை அவர்களுடைய கோட்டை. நம்மை தாண்டி மக்கள் யாருக்கும் ஓட்டு போடு மாட்டார்கள் என்ற இறுமாப்பு, அவர்களிடம் உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், சென்னை மக்கள் தி.மு.க.,வுக்கு சரியான சம்மட்டி அடி கொடுப்பர்.

கடந்த 2021 முதல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தமிழகத்தில் ஆண்டுதோறும் எட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது.மேலும், மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்கு, ஆண்டுதோறும் அனுப்ப வேண்டிய குற்றச் சம்பவங்கள் குறித்த விபரங்களை, 2023க்கு பின், தி.மு.க., அரசு கொடுக்க மறுத்து வருகிறது. இதை வெளியிட்டால் மக்கள் கொந்தளித்து விடுவர் என, மத்திய அரசை மட்டுமின்றி, தமிழக மக்களையும் தி.மு.க., ஏமாற்றி வருகிறது.முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன், குடும்ப அரசியல் வழி வந்தவர் தான். அவர் பேசுவதெல்லாம், 'விசாகப்பட்டினத்திற்கு கூகுள் நிறுவனத்தை கொண்டு வர வேண்டும்; டேட்டா சென்டர் கொண்டு வர வேண்டும்' என, ஆக்கப்பூர்வமாக உள்ளன.

ஆனால், முதல் வர் ஸ்டாலின் மகன் பேசுவதெல்லாம், பிரச்னைக்குரிய விஷயம் மட்டும் தான்.கடந்த 2021ல் தமிழகத்தின் மொத்த கடன், 4.50 லட்சம் கோடி ரூபாய். இது தற்போது, 10.62 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மகளிர் உரிமை தொகை உட்பட, தி.மு.க., அரசு ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு தலா, 37,000 ரூபாய் கொடுத்து உள்ளது. இதை கணக்கிட்டால், ஒரு நாளுக்கு 20 ரூபாய் வருகிறது. தற்போது ஒரு ரேஷன் கார்டு மீது, 4.82 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. அதாவது, கொடுத்தது 20; எடுத்தது 150 ரூபாய். எனவே, தி.மு.க.,வினரை பெண்கள் மன்னிக்கவே கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.