நடிகர் விஜய்யின் விவாகரத்து விவகாரம் குறித்து அண்ணாமலை உருக்கமான பதில்!

 
1

'நாளை நமதே, தமிழ்நாடு நமதே' என்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நேற்று (பிப். 27) நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். 

பின்னர் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, "ஓ.பன்னீர்செல்வம் திமுகவிற்கு சென்றது வருத்தம் தான். ஓ. பன்னீர்செல்வம் நீண்ட நெடுங்கால அதிமுகவில் இருந்தவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடி மீது பெரும் அன்பு வைத்திருந்த ஒரு தலைவர். 

வருத்தமாக உள்ளது, காலத்தின் சூழ்நிலை அந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.  அந்த முடிவு அவருடைய முடிவு. எல்லாம் முடிவுக்கும் ஒரு சரி, ஒரு தவறு இருக்கும், அதை காலம்தான் பதில் சொல்லும். ஓ. பன்னீர்செல்வம் மீது பெரும் மரியாதை இருக்கிறது, நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன், மிகவும் எளிமையானவர்.

அவர் திமுகவிற்கு போனதற்காக வேற மாதிரி பேச விரும்பவில்லை, காலத்தின் சூழல் அந்த முடிவை அவர் எடுக்க வைத்துள்ளது. எங்கிருந்தாலும் அவர் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும். எல்லா முடிவிற்குமே சாதக பாதகம் இருக்கிறது, என்னைப் பொருத்தவரை இந்த முடிவு (ஓ. பன்னீர்செல்வத்திற்கு) பாதகமான ஒரு முடிவாகும்.  

திமுகவை எதிர்த்து தான் அவர்களது அரசியலே, திமுக ஒரு தீய சக்தி என்று சொல்லிதான் அந்த அரசியலே. திமுகவை எதிர்த்து எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி, அதிமுக. இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கின்ற கட்சி என்ற முறையில் எனக்கு மிகப்பெரிய வருத்தம் இருக்கிறது.

அண்ணன் அவரது உடல்நிலையை பார்த்துக் கொள்ளட்டும், எங்கிருந்தாலும் மகிழ்ச்சி. ஓ பன்னீர்செல்வத்தை பொருத்தவரை எந்த அளவிற்கு மோடி மீது பெரிய மரியாதை வைத்திருந்தாரோ, 2024 பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார்.  என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு முன்னாள் முதலமைச்சர் சுயேச்சை சின்னத்தில் நின்று நான் கேள்விப்பட்டதில்லை, அந்த அளவிற்கு பிரதமர் மீது அன்பு வைத்துள்ளவர். 

காலத்தின் சூழல் முடிவு அப்படிதான் எடுக்க வைக்கும், அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு தனிக்கட்சி வைத்து ஆரம்பித்துள்ளார். அவருடன் இருந்த மூத்த தலைவர்கள் படிப்படியாக வேறு இடத்திற்கு வெவ்வேறு கட்சிக்கு பயணிக்க ஆரம்பித்து உள்ளார்கள். எனக்கும் பெரிய வருத்தம்தான். உடல்நிலையை பார்த்துக் கொள்ளட்டும், எங்கிருந்தாலும் சந்தோஷம்தான்" என பேசினார்.

தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "விஜய்யின் மனைவி சங்கீதா, விஜய் அவர்களைப் பொறுத்தவரை, கடந்த டிசம்பர் மாதத்தில் அவரது மனைவி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்துக்கான மனுவை பதிவு செய்து இருந்தார்கள் என்பது இன்று வெளியே வந்துள்ளது. நான் எப்போதும் சொல்வதுதான், இது மூன்று பேருக்கான பிரச்சனையாக தான் பார்க்கிறேன். விஜய், அவருடைய மனைவி, நீதிமன்றம் இந்த மூன்று பேருக்கு மட்டும்தான் இது சம்பந்தப்பட்டதாக நான் பார்க்கிறேன். ஒரு தனிப்பட்ட மனிதருடைய தனிப்பட்ட வாழ்க்கையாக நான் பார்க்கின்றேன்.

விஜய்யின் அரசியல் கருத்துக்கு நான் பதில் சொல்கிறேன், அதற்கு தயாராக இருக்கிறேன். தனிப்பட்ட வாழ்க்கை மனைவிக்கும் கணவனுக்கும் எங்கிருந்தாலும் சந்தோஷம் இருக்கட்டும், எங்கிருந்தாலும் அமைதி கிடைக்கட்டும், அரசியல் ரீதியாக கருத்து சொல்ல விரும்பவில்லை. இதை நான் அரசியல்ப்படுத்த விரும்பவில்லை. அரசியலுக்கு வந்துவிட்டோம் என்றால் இது டிரையல் பை பையர், தீப்பந்தத்திற்கு ஒரு மனிதன் சென்றுவருவது போல தான்.

அதுவரை தோண்டபடாத அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை, அரசியலுக்கு வந்த பிறகு தோண்டப்படும். அது எல்லா தலைவருக்குமே இருந்ததுதான். அது விஜய் அவர்களுக்கு இருக்கிறது. அவர் அரசியல் வரும்போது இதையெல்லாம் உணர்ந்துதான் வந்திருப்பார். இதை அவர் கடந்து தான் போக வேண்டும், தாண்டி தான் போக வேண்டும், இதை தாண்டிதான் அவரது அரசியல் இருக்கிறது.இதையெல்லாம் பார்த்து தான் மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்களா? ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? என்ற இந்த தேர்தல் முடிவு செய்யும்.

விஜய் அவர்களைப் பொறுத்தவரை டிரையல் பை பையர் தான் இது. ஒரு சினிமா நடிகராக நிம்மதியாக வீட்டில் இருந்திருக்கலாம், ஒரு பிரபலமாக இருந்திருக்கலாம், நான் கையை தூக்கி காட்டினால் ஒரு லட்சம் பேர் எனக்கு ஆரவாரம் செய்யலாம், சிரஞ்சீவி அவர்களுக்கு ஏற்பட்டதுதான். எத்தனையோ பெரிய நடிகர்கள் அரசியல் களத்திற்கு வந்த பிறகு டிரையல் பை பையர் பிரஷரில் இருந்து வெளியே வர வேண்டும். இது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கும் ஆரம்பகட்ட காலத்தில் இருந்தது. 

இதை பாசிடிவ், நெகட்டிவ் என்று நான் சொல்ல விரும்பவில்லை. விஜய் அவர்கள் இதை கடந்து சொல்ல வேண்டும், இதற்கான விலையை இதற்கான நியாயமும் அவர் தாண்டி தான் பயணம் செய்யணும். இது தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனை. இதில் நான் இந்த நேரத்தில் தனி மனிதனைப் பற்றி விமர்சனம் செய்து அதை அநாகரீகமாகவோ அரசியல்படுத்தவோ விரும்பவில்லை. என்னுடைய அரசியல் அப்படிப்பட்ட அரசியல் கிடையாது" என பதிலளித்தார்.

திமுகவை பொருத்தவரை ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தும் முதலமைச்சரைப் பொறுத்தவரை அவர் மீது இருக்கும் மக்கள் கோபத்தை தணிப்பதற்காக பல முயற்சியை எடுக்கிறார். புதிதாக கூட்டணியை உருவாக்குகிறார், கூட்டணிக்குள் ஓபிஎஸ்-ஐ கொண்டு வருகிறார். இவர்களையெல்லாம் கொண்டு வந்தால் அந்தக் கட்சியின் தன்மை மாறிவிடும்,முகம் மாறிவிடும், அதனால் மக்களுக்கு ஆட்சியின் மீது கோபம் வராது என்று நினைக்கிறார். அதையெல்லாம் நான் நம்பவில்லை. 

மக்கள் ஒரு மனதாக இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும், இந்த ஆட்சி வேண்டாம் என்று முடிவு செய்த பிறகு அவர்கள் என்ன மாயாஜால வித்தை செய்தாலும் திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும்.  இன்னும் 30 நாட்களில் யாரை எல்லாம் கூட்டிக்கொண்டு வந்தாலும், இந்த ஆட்சி ஏப்ரல் மாதத்தில் திரும்ப வருவதற்கான எந்த சாத்திய கூறுகளும் அறிகுறிகளும் களத்தில் நான் பார்க்கவில்லை. ஆட்சியின் மீதான கோபம், அவநம்பிக்கை, முதலமைச்சர் பொய் சொல்லி உள்ளார்.  முதலமைச்சர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்கின்ற எண்ணம் சாதாரண மனிதனுக்கு வந்துள்ளது" என முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடினார்.