நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி பாசமா? எல்லாம் வேஷம்! - முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி

 
annamalai mkstalin

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த ரிசர்வ வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ள நிலையில்,  செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த நோட்டுகள் செல்லுபடி ஆகும் என்றும் தெரிவித்துள்ளது.  இந்தியா முழுவதும் இதற்கு முன்பு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல்  நிலையை 2016 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி திரும்ப பெற்ற நிலையில்,  கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2000 ரூபாய் நோட்டு

ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி மீண்டும் திரும்ப பெற்றுள்ளது. அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை 20,000 வரை மாற்றுவதற்கான வசதி வருகிற 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர்  பக்கத்தில்,  “500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள், கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!”என்று விமர்சித்துள்ளார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு பதிலளிக்கும் வகையில், கள்ளச்சாராயத்தால் 22 மரணங்கள், உயிர் இழப்பிற்கு காரணமானவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு, திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள், டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி, இவை எல்லாம் மறைக்க நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி.
பாசமா? எல்லாம் வேஷம்! என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.