“எதற்கு போராட்டம் செய்கிறோம் என தெரியாமலே போராட்டம் செய்யும் ஒரு கட்சினா அது த.வெ.க. தான்”- அண்ணாமலை

எதற்கு போராட்டம் செய்கிறோம் என தெரியாமலே போராட்டம் செய்யும் ஒரு கட்சினா அது த.வெ.க. தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை சமீபத்தில் மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியது, இதனை தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்த வக்ஃபு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டன அறிக்கையை வெளியிட்டதுடன், இன்று கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கோவையில் திமுகவினர் விழாவாக மருதமலை குடமுழுக்கு நடந்து இருக்கின்றது. சிறப்பு பாஸ் முழுமையாக அந்த கட்சியினருக்கே வழங்கப்பட்டுள்ளது. திமுகவினர் மருதமலை முருகனை அவமானப்படுத்தி இருக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். குடமுழுக்கில் எந்த திமுக அமைச்சர்களுமே இதில் கலந்து கொள்ள வில்லை. ஏன் கலந்து கொள்ள வில்லை? ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவது தவறில்லை. எதற்கு போராட்டம்? எதற்கு போராட்டம் செய்கிறோம் என தெரியாமலேயே தவெக போராட்டம் நடத்தி கொண்டு இருக்கின்றனர். எதற்கு போராட்டம் என சொல்லிவிட்டு போராட்டம் நடத்துங்கள்.” என்றார்.