இன்னும் சில காலத்தில் கட்சியிலிருந்து சிலர் வெளியேற வாய்ப்புள்ளது- அண்ணாமலை

 
Annamalai

இன்னும் சில காலத்தில் பெரிய தலைகள் பாஜகவில் இணைய இருக்கிறார்கள். சிலர் வெளியேறவும் வாய்ப்பு உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

annamalai

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. ஆளுநரிடம் இருக்கும் ஆன்லைன் தொடர்பான விவகாரம் சரியாக இல்லாத காரணத்தினால் மீண்டும் சட்டமன்றத்தில் அதை சரி செய்து ஆளுநரிடம் கொடுக்க வேண்டும். மீண்டும் சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி குறித்து ஆராய்ந்து எல்லாம் எம்எல்ஏக்களும் ஒன்றிணைந்து மீண்டும் மசோதாவை சரி செய்ய வேண்டும். இன்னும் ஆறு மாதத்தில் பெரிய தலைவர்கள் பாஜகவில் இணைவதற்கான சாத்தியம் உள்ளது.  சிலர் வெளியேறவும் வாய்ப்பு உள்ளது. இது அரசியலில் எப்போதும் சகஜமான ஒன்றுதான். தலைவர் என்பவர் எந்த சலனமும் இல்லாமல் தீர்க்கமாக முடிவுகளை எடுக்க வேண்டும். அதைத்தான் நான் சொல்லி வருகிறேன்

இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரவில்லை. பாஜக தனக்குரிய இடத்தை கண்டுபிடித்து தனி பெரும்பான்மையாக இருந்து வருகிறது. பாஜகவின் பாதையை கூட்டணி கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம். எப்போது பாஜக ஆட்சிக்கு வரும் என்று பாஜக தொண்டர்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள். நான்  சொன்ன கருத்திலிருந்து பின்வாங்க போவதில்லை. அதே நிலைப்பாட்டில் தான் உள்ளேன். ஜெயலலிதாவை ஒப்பிட்டு நான் கூறவில்லை. அரசியல் கட்சியில் சில இடங்களில் மேனேஜராகவும், சில இடங்களில் தலைவராகவும் உள்ளனர்” என்றார்.