பாஜகவினர் உணர்ச்சிவசப்பட வேண்டாம்- அண்ணாமலை

 
Annamalai

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த நிலையில், பாஜகவினர் உணர்ச்சிவசப்பட வேண்டாம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். 

Annamalai

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ் தாயார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பாஜக மாநில தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “அதிமுகவில் பாஜக நிர்வாகிகள் இணைந்து வருவதால் ஈபிஎஸ் மீதான கோபத்தில் படத்தை தொண்டர்கள் எரித்தனர். கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜகவினர் தார்மீக அடிப்படையில் தகுந்த மரியாதை வழங்க வேண்டும். பாஜகவினர் யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்” என்றார். 

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ( IT Wing) தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.  இதேபோல் தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப செயலாளர் திலீப் கண்ணன், பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து பாஜக நிர்வாகிகள் பலர், அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவருவது குறிப்பிடதக்கது.

இதனிடையே பாஜகவின் மாநில ஐடி விங் நிர்வாகி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது தொடர்ந்து பாஜக நிர்வாகியை அதிமுகவில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்  மணியாச்சி பேருந்து நிலையம் அருகே பாஜக ஐடி விங் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருவ படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.