டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வா? கொதிக்கும் அண்ணாமலை

 
அண்ணாமலை

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில், நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழக பாஜக சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டரில், “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில், 2013ஆம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழக பாஜக சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டேன். ஆசிரியர் பணி நியமனம் குறித்து போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக தற்போது முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொண்டிருக்கிறது. 


தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்ற அரசாங்க ஆணை 149 ஐ அமல்படுத்தத் துடிக்கிறது. 2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசாணை 149ஐக் கைவிட்டு, நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பாக ஏற்கனவே 12/02/2022 மற்றும் 10/04/2023 ஆகிய தேதிகளில் அறிக்கைகள் வெளியிட்டிருந்தோம். ஆசிரியப் பணி எனும் உன்னதமான பணியில் இருக்கும் சகோதர சகோதரிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும், தொடர்ந்து அவர்களை அலைக்கழிக்க வேண்டாம் என்றும் திறனற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.