மாற்றம் ஒன்றே மாறாதது...அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - அண்ணாமலை!

 
Annamalai

தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக, இனிய 2025 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் ஆட்சியில், முன்னெப்போதுமில்லாத வகையில், நம் நாடு, உலகின் முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் முதன்மையான நாடாக இருக்கிறோம். உற்பத்தி, விவசாயம், வானியல் ஆராய்ச்சி, விளையாட்டு, தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும், நமது நாடு பல மடங்கு முன்னேறியிருக்கிறது. இந்த ஆண்டு, உலக அளவில், பொருளாதாரத்தில் நான்காவது இடத்திற்கு நாம் முன்னேறவிருக்கிறோம். இவை அனைத்தும், மக்கள் நலனை நோக்கமாகக் கொண்ட, ஊழலற்ற நல்லாட்சியால் மட்டுமே சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், செழுமை வாய்ந்த வரலாறு கொண்டது நம் தமிழகம். பல துறைகளிலும், உலகளாவிய அளவில் சாதனை படைத்தவர்கள் நம் தமிழக மக்கள். ஒவ்வொரு ஆண்டும், நம்மில் இருந்து பல சாதனையாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். உரிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றால், நமது இளைஞர்கள், இன்னும் பல உயரங்களை எட்டுவார்கள்.ஆனால், தமிழகத்தின் தற்போதைய நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. சாதிக்க வேண்டிய இளைய தலைமுறை, பெருகி வரும் போதைப் பொருள் புழக்கத்தினால் திசைதிருப்பப்படுகிறது. அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நம் சகோதரிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவர்கள், ஆளுங்கட்சி என்ற போர்வையில், வெளியே உலவிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான ஒரு சமூகத்தையா நமது குழந்தைகளுக்குக் கொடுக்கப் போகிறோம். 

Annamalai

தம் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே தமது வாழ்க்கையைத் தியாகம் செய்யும் நடுத்தர மக்கள் அதிகமுள்ள மாநிலம் தமிழகம். யாருக்கும் தீங்கு எண்ணாமல், யாருக்கும் இடர்பாடு இல்லாமல், அரசின் மீதும், காவல்துறையின் மீதும் உள்ள நம்பிக்கையால் மட்டுமே, தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் நடுத்தர மக்கள், தற்போது மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதுமே, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பெரிதும் கவலை அளிப்பதாக இருக்கிறது. எனினும், மாற்றம் ஒன்றே மாறாதது. இந்தச் சூழல் மாறும். நம் தமிழக மக்கள், இந்த இருட்டிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், பல கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், புத்தாண்டை எதிர்கொள்கிறோம். புதிய வாய்ப்புகளும், வழிகளும் நம் முன்னே நிறைந்திருக்கின்றன. நம்முடைய தேர்வு, நமக்கானது மட்டுமின்றி, நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு, நல்லவற்றையே தேர்ந்தெடுப்போம். தமிழகத்தை மீண்டும் சிறப்பானதாக்குவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.