டாக்டர் சௌமியா சுவாமிநாதனுடன் அண்ணாமலை சந்திப்பு!

 
annamalai

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆராய்ச்சி அறக்கட்டளைக்குச் சென்று அவரது மகள், டாக்டர் சௌமியா சுவாமிநாதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்றைய தினம், தரமணியில் அமைந்துள்ள, இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை, அமரர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களது ஆராய்ச்சி அறக்கட்டளைக்குச் சென்று, அவரது மகள், டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அமரர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களால், பாரத் ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் பகிர்ந்து கொண்டோம்.

பெண்கள் முன்னேற்றம், எளிய மக்கள் மேம்பாடு, இயற்கை சார்ந்த தொழில்நுட்பம், கடற்கரையோர அமைப்பு ஆராய்ச்சி, சுற்றுச் சூழல் தொழில் நுட்பம் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஆய்வுகள் செய்து, பல லட்சம் மக்கள் வாழ்வில் ஒளியேற்றியுள்ள இந்த அறக்கட்டளை, அமரர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களால், கடந்த 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்ற பெருமைக்குரியது. 


டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அவர்களும், உலகச் சுகாதார அமைப்பின் துணை இயக்குநராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பொது இயக்குநராகவும் உயர் பொறுப்புக்கள் வகித்தவர். தலைசிறந்த குழந்தைகள் நல மருத்துவராகவும், மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் புகழ் பெற்றவர். அவரிடம் இருந்து, பாரத் ரத்னா அமரர் எம்.எஸ். சுவாமிநாதன் குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.