துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான் - எடப்பாடி கடும் தாக்கு..!

 
1

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் இல்ல திருமண விழா இன்று நடந்தது. விழாவில் முன்னாள் முதல்வர் , அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். இதன்பிறகு சென்னை செல்வதற்கு மதுரைக்கு திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழக முழுவதும் அனைத்து குற்றங்களும் அதிகரித்துள்ளன. சமீபகாலமாக பல்வேறு கட்சித் தலைவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.

குறிப்பாக நெல்லையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் பற்றி போலீஸார் விசாரிப்பதாகக் கூறுகின்றனர். ஆனாலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. 4 நாள் முன்பு சேலம் மாநகரத்தில் எங்கள் கட்சியின் மண்டல குழு முன்னாள் தலைவர் சண்முகம் படுகொலை செய்யப்பட்டார். 2 நாளுக்கு முன்பு, சென்னையில் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படு கொலை செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் தொகுதியிலேயே இச்சம்பவம் நடந்திருப்பதாக தெரிகிறது.

முதல்வர் தொகுதியிலேயே தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சட்டம், ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சூழலாக தான் பார்க்கப்படுகிறது. மக்களுக்கு மட்டுமின்றி அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. காவல்துறையினரை கண்டு யாருக்கும் பயமில்லை.

இடைத்தேர்தல்; விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது எங்கள் கட்சி தலைமையின் முடிவு. ஜெயலலிதா இருக்கும்போது, 5 தொகுதி இடைதேர்தல்களை புறக்கணித்துள்ளோம். கருணாநிதியும் புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்லை புறக்கணித்து இருக்கிறார். ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களை எப்படி கொடுமைப்படுத்தினர் என, தெரியும். 30க்கும் மேற்பட்ட இடத்தில் பட்டியில் அடைப்பது போன்று மக்களை அடைத்து வைத்து, காலை, மதியம், மாலை என, உணவளித்தனர். அங்கே ஜனநாயக படுகொலை அரங்கேறியது.

தற்போது விக்கிரவாண்டியிலும் ஒரு வீட்டில் இருந்து வேட்டி, சட்டைகள் சாலையில் போடப்படுகின்றன. திமுக அமைச்சர்கள் முகாமிட்டு பணம், பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் செத்துவிடும்.தேர்தல் சுதந்திரமாக நடக்கவேண்டும்.

கட்சிக்கு விசுவாசமாக இருந்ததில்லை: ஓபிஎஸ் அதிமுகவில் சேர நினைக்கலாம்.எங்களது கட்சி தலைமைக்கு உடன்பாடு இல்லை. பொதுக் குழு தீர்மானம் நிறைவேற்றி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். கட்சிக்கு அவர் விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை.

போடி தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணிறாடை நிர்மலாவுக்கு முகவராக பணியாற்றியவர் ஓபிஎஸ். நாங்கள் ஒன்றாக இருந்தபோது, பல கோரிக்கைகளை வைத்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறினார். யாரைச் சுட்டிக்காட்டி சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அதற்கு ஆணையம் அமைத்து விசாரித்தோம். ஆணையம் அமைக்க, என்னை நிர்பந்தித்தார். ஒருங்கிணைப்பாளர் பதவி வேண்டும் எனக் கேட்டார்.

அவருக்கு 3 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு இருந்தாலும் பதவி கொடுத்தோம். 2019-ல் தேனியில் அவரது மகன் போட்டியிட்டபோது, அவருக்கு மட்டுமே பணியாற்றினார். பிற தொகுதிகளில் வேலை செய்யவில்லை. கட்சியை பற்றி கவலை இன்றி மகனைப் பற்றி கவலைப்பட்டார். ஒற்றைத் தலைமை வேண்டும் என்றபோது, அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்க கேட்டுக் கொண்டனர். பேச்சுவார்த்தையில் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. நீதிமன்றம் சென்றார். ரவுடிகளை வைத்து கட்சியினரை தாக்கி தலைமை அலுவலகத்தில் கதவுகளை உடைத்து உள்ளிருந்த பொருட்களை சூறையாடி திருடிச் சென்றனர்.

சின்னத்தை முடக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்தின் வழக்கு தொடர்ந்தார். மக்களவை தேர்தல் ஏதாவது கட்சிக்கு இணக்கமாக இருப்பார் என, பார்த்தால் ராமநாதபுரத்தில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டார். அவருக்காக வாக்குகள் விழவில்லை. பணத்தால் பெற்றார். இவர் எப்படி விசுவாசமாக இருப்பார். அதிமுகவில் அவர் இணைய ஒரு சதவீதம்கூட வாய்ப்பில்லை.

அண்ணாமலை ஒரு பச்சோந்தி. அவர் விமர்சிப்பதுபோல் நான் துரோகி அல்ல. துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான். கீழத்தரமாக, அவதூறாக எங்களது தலைவர்களை விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக் கொள்வோம். எங்களை ஆளாக்கிய தலைவர்களை பற்றிப் பேசினால் எங்களுக்கு குமுறல் வரும். இவர் கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமில்லாதவர். நாங்கள் அவரைப் போல் அப்பாயின்மென்ட்ல வரவில்லை. கண்ணாடியில் முகத்தை பார்த்து அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

கள்ளச் சாராய விவகாரத்தில் மாநில அரசு விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப் பட மாட்டார்கள். எம்ஆர் விஜயபாஸ்கர் வழக்கு சிவில் வழக்கு. பிராந்தி, கள்ளு, சாராயம் குடித்தாலும் போதை தான். படிப்படியாக குறைத்தே பூரண மது விலக்கை கொண்டு வர முடியும். மதுவுக்கு பழக்கமானவர்கள் உடனே நிறுத்த முடியாது. படிப்படியாக குறைத்து பூரண மது விலக்கை அமல்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்பி. உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக காலையில் விமான நிலையம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன்,செல்லூர் கே. ராஜூ, ஆர்பி. உதயகுமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.