காலணியுடன் காவடி எடுத்து கடவுளை அவமானபடுத்திய அண்ணாமலை! வலுக்கும் கண்டனம்

 
அண்ணாமலை

அண்ணாமலை காலணியுடன் காவடி எடுத்து கடவுளை அவமான படுத்தியது கண்டனத்துக்கு உரியது, அதற்காக அவர் முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் கடவுளான முருகனை வேல் ஆகவும், மயில் ஆகவும், காவடியாகவும், சேவல் கொடியாகவும் பல்வேறு வடிவத்தில் நாம் வழிபாடு செய்து வருகிறோம். அதில் காவடியில் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, சந்தன காவடி, சர்ப்ப காவடி மற்றும் பல காவடிகள் பக்தியுடன் பக்தர்கள் காவடி எடுத்து இறைவனை வழிபாடு செய்து வருகிறார்கள். தமிழக பாஜக தலைவர் சகோதரர் திரு அண்ணாமலை அவர்கள் காலில் காலணி அணிந்து காவடி ஆட்டம் ஆடுவது போன்ற போட்டோ வலைதளத்தில் பரவி வருகிறது. நாம் வணங்கும் தெய்வத்தின் அடையாளத்திற்கு உரிய மதிப்பு கொடுக்காமல் போகிற போக்கில் விளையாட்டு பொருள் வைத்து ஆடுவது போல ஆடுவது இந்து மக்களின் தமிழ் கடவுளான முருகனை அவமானப் படுத்தியது ஆகும்.

தமிழகம் மற்றும் அண்டை மாநிலதில் இருந்து கூட காலில் செருப்பு அணியாமல் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் முருக கோவிலுக்கு கூட முருக பக்தர்கள் பல நாட்கள் விரதம் இருந்து காவடி எடுத்து வருகின்றனர். அவ்வாறு காவடி எடுத்து வரும் பக்தர்கள் தங்களை துன்புறுத்திக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் வெறும் காலிலேயே நடந்து முருகனை வழிபடுகின்ற ஆன்மீக பூமி இது. ஆன்மீக ஆதரவாளர் போல் பேசுகின்ற திரு அண்ணாமலை அவர்கள் முருக கடவுளை அவமானப்படுத்துவது போலவும் லட்சக்கணக்கான முருக பக்தர்களின் மனது புண்படுவது போலவும் நடந்து கொண்டு இருப்பது வேதனைக்கு உரியது. விரும்பத் தகாதது. 

காலணி அணிந்துதான் காவடி எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் காவடியை தொடாமல் தவிர்த்து இருக்க வேண்டும். சுற்றி இருக்கின்ற மக்களும் கண்டு கொள்ளாமல் ஆடிக்கொண்டு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. உங்களுடைய செயல் மன்னிக்க முடியாத செயல் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். புண்பட்ட முருக பக்தர்கள் மனதிற்கு ஆறுதலுக்காகவாவது முருக பக்தர்கள் அனைவரிடமும், முருக கடவுளிடமும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.