"என் தாலியை மட்டும் மீட்டுத் தாங்க.." பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய அண்ணாமலை!
மதுரை, சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பெண் தனலட்சுமி, 35; மாற்றுத் திறனாளி. இவரது கணவர் டெய்லர். தனலட்சுமியின் குடல் பிரச்னையால் சிகிச்சைக்காக, ஒரு நகைக்கடையில், தோடு, தாலி உட்பட நகைகளை அடமானம் வைத்துள்ளனர். பணத்தை திருப்பிக் கொடுக்க தாமதமானதால், நகை ஏலத்திற்கு சென்றது.
இந்நிலையில், மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்திற்கு தனலட்சுமி சென்றார். அங்கு பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையை பார்த்து, அவரிடம் தன் நிலையை தெரிவித்தார். அவர், ஜெயந்தி என்ற வழக்கறிஞர் மூலம், பெண்ணின் நிலையை அறிந்து புதிதாக தாலி வாங்க உதவி செய்தார். இந்த செயலை பல்வேறு தரப்பினர் பாராட்டியுள்ளனர்.
தனலட்சுமி கூறியதாவது: மாற்றுத் திறனாளியான நான் காதல் திருமணம் செய்தேன். இதனால் உறவினர்கள் என்னை ஏற்கவில்லை. மதுரையில் நடந்த பிரதமர் பொதுக் கூட்டத்திற்கு சென்றேன். அங்கு, அண்ணாமலையை சந்தித்து, அவரது காலில் விழுந்தேன். என் தாலியை மட்டும் திரும்ப பெற்றுத் தரும்படி கூறினேன். அவர், விசாரித்து புதிதாக தாலி வாங்கித் தந்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

