கோவையில் இருந்தும் வராத அண்ணாமலை! பாஜகவின் முக்கிய தேர்தல் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்?
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க பாஜக மையக்குழு கூட்டம் நேற்று (ஏப்.28) கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதில் அமைப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அர்ஜூன மூர்த்தி, கே.டி.ராகவன், கருப்பு முருகானந்தம், எஸ்.ஆர்.சேகர், கனகசபாபதி, ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், தேர்தல் பணிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கபட்டது.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இத்தேர்தலில் தான் எதிர்பார்த்த தொகுதியை கட்சி தலைமை ஒதுக்காததால், அண்ணாமலை அதிருப்தியில் போட்டியிடவில்லை என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அந்த சமயத்திலும், கட்சியின் சில முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாஜக முக்கிய தலைவர்கள் கோயம்புத்தூர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் கோயம்புத்தூரில் வசிக்கும் அண்ணாமலை, இந்த ஆலோசனை கூட்ட நிகழ்வில் பங்கேற்காமல் வெளியூருக்கு சென்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

