கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை..

அதிமுக - பாஜக கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுடன் கமலாலயத்தில் ஆலோசனை கொள்கிறார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை முன்னதாக சென்னை அமைந்தகரையில் நடந்த அவசர கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது, “கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை. பா.ஜ.க.வை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அண்ணாமலையில் இந்த பேச்சு, அவரது கட்சியினரிடையேவே அதிருப்தியை ஏற்படுத்தியது. அண்ணாமலை பேசிக்கொண்டிருந்த போதே, மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், தேர்தல் கூட்டணி குறித்து பேசும் நேரம் இதுவல்ல என்றும், பா.ஜ.க. உயர்மட்ட குழுவில் இது குறித்து பேச வேண்டும் என்றும் கூறி அவரை திசைமாற்றியிருக்கிறார். ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்துள்ள நிலையில் அண்ணாமலையின் பேச்சு பா.ஜ.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் இந்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை தீடீர் ஆலோசனையில் ஈடுப்பட்டார். அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் தொடர்பாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.