அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக பங்கேற்காது - அண்ணாமலை அறிவிப்பு!

 
Annamalai

வரும் மார்ச் 5, 2025 அன்று கூட்டப்பட உள்ள தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழக பாஜக பங்கேற்கப் போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் ஆதாரமற்ற அச்சம் குறித்து விவாதிக்க, மார்ச் 5, 2025 அன்று திட்டமிடப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, தமிழக பாஜகவை அழைத்ததற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைத்திருந்த உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான கருத்துக்களை, இந்தக் கடிதத்தின் மூலம் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தொகுதி மறுவரையறை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே தொகுதி மறுவரையறை குறித்து நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் கற்பனையான அச்சங்களைப் பரப்பவும், அது குறித்து வேண்டுமென்றே பொய் சொல்லவும் மட்டுமே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள், தனது சமீபத்திய தமிழக வருகையின் போது கூட, தொகுதி மறுவரையறையினால் எந்த மாநிலங்களும் பாதிக்கப்படாது என்றும், தொகுதி மறுவரையறை என்பது, விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். 
தொகுதி மறுவரையறைக்கான அறிவிப்பு, தொகுதி மறுவரையறை ஆணையத்தினால் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அறிவிக்கப்பட்டபோதும், நீங்கள் பொய்களைப் பரப்பி, பின்னர் அந்தப் பொய்கள் அனைத்தும் உடைத்தெறியப்பட்டதற்குப் பிறகும் நீங்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது. "எவ்வளவு மக்கள் தொகையோ அவ்வளவே உரிமைகள்" என்று பொருள்படும் "ஜித்னே அபாதி உத்னி ஹக்" என்று திமுக இடம்பெற்றுள்ள இந்தி கூட்டணி பிரச்சாரம் செய்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், இந்தி கூட்டணியின் இந்த பிரச்சாரம், தொகுதி மறுவரையறையின்போது, மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தியுள்ள தென்மாநிலங்களை பாதிக்கும் என்று கூறி பதிலடி கொடுத்தார். தொகுதி மறுவரையறை காரணமாக, தமிழகத்தின் நாடாளுமன்ற இடங்கள் குறையும் என்ற கற்பனையான பயம் உங்களுக்கு முன்னரே இருந்திருந்தால், சமீபத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, உங்கள் 39 இந்தி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவையில் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்க முடியும். 
ஆனால், உங்கள் நான்கு ஆண்டுகால நிர்வாகச் சீர்கேட்டினால் பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை எதிர்கொள்ளப் பயந்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, கடந்த ஒரு வாரமாக நீங்கள் பரப்பிய கற்பனையான இந்தித் திணிப்பு நாடகத்தைப் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், திடீரென்று ஒரு நாள் விழித்தெழுந்து, தொகுதி மறுவரையறை குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு, திசைதிருப்ப முயற்சித்திருக்கிறீர்கள். அரசியலமைப்புச் சட்டப்படி பதவியில் இருக்கும் ஒருவர், உண்மைக்கு மாறாக, நமது மொழியை இழிவு படுத்துவதாகவும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு நிதி உதவி வழங்கவில்லை என்றும், எவ்வளவு காலம்தான் பொய்களைப் பரப்ப முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. திமுக, மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருந்தபோதிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் பல அமைச்சர் பதவிகளை வகித்தபோதும், தமிழக எல்லைகளுக்கு அப்பால், நமது தமிழ் மொழியைக் கொண்டு செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மறுபுறம், தமிழ் மொழியின் செழுமையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒப்பிட முடியாதவை. அதன் பட்டியல் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.