டிஆர்பாலு மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர்வேன்: அண்ணாமலை அறிவிப்பு..!

 
1 1

திமுக எம்பி டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜரானார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக டி.ஆர். பாலுவிடம் அவரே நேரடியாகக் குறுக்கு விசாரணை செய்தார். வழக்கமாக வழக்கறிஞர்கள் வாதாடும் நிலையில், இந்த வழக்கில் அண்ணாமலையே ஒரு சாமானிய மனிதனாகக் களமிறங்கி வாதிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறுக்கு விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "டிஎம்கே பைல்ஸ்" மூலம் நான் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் வழக்கறிஞரின் பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற்றுவிட்டு, நானே நேரடியாக வாதிடத் துணிந்தேன். எத்தகைய அதிகாரத்தில் இருப்பவர்களையும் சாமானிய மனிதர்கள் நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியும் என்பதற்கு இன்றைய நிகழ்வே சாட்சி" என்றார்.

Advertisement

விசாரணையின் போது டி.ஆர். பாலுவின் குடும்ப நிறுவனங்கள், சேது சமுத்திரம் திட்டம் மற்றும் அவர் பயன்படுத்தும் கார் எந்த நிறுவனத்தின் பெயரில் உள்ளது என்பது வரை பல்வேறு கேள்விகளை முன்வைத்ததாக அண்ணாமலை தெரிவித்தார். இருப்பினும், வழக்கு நிலுவையில் இருப்பதால் அனைத்துக் கேள்விகளையும் தற்போது பொதுவெளியில் பகிர முடியாது என்றும், வழக்கு முடிந்ததும் விரிவாகத் தெரிவிப்பேன் என்றும் கூறினார்.

தனது மனைவி மீதான புகார்களுக்குப் பதிலடி கொடுத்த அண்ணாமலை, குறுக்கு விசாரணையின் போது தனது மனைவியின் கல்வித் தகுதி, வேலை மற்றும் வருமானம் குறித்து டி.ஆர். பாலுவிடம் கேள்வி எழுப்பியதாகக் கூறினார். அதற்கு அவர் 'தெரியாது' என்றே பதிலளித்ததாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, எதுவுமே தெரியாமல் தனது குடும்பத்தின் மீது ஊழல் புகார் கூறுவது ஏற்கத்தக்கதல்ல எனச் சாடினார்.

தங்கள் குடும்பம் வாங்கியுள்ள அனைத்துச் சொத்துகளும் வருமான வரி செலுத்தப்பட்டு, முறையாக வங்கி மூலம் கடன் பெற்று வாங்கப்பட்டவை என்று அண்ணாமலை விளக்கமளித்தார். தவறான தகவல்களைக் கூறி தனது குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக, டி.ஆர். பாலு மீது நாளை புதிய அவதூறு வழக்கைச் தொடரப் போவதாக அவர் அதிரடியாக அறிவித்தார்.

இந்த வழக்கில் தனது 15 ஆண்டுகால உழைப்பு, தனது மனைவி பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றிப் பெற்ற சம்பளம் மற்றும் தாங்கள் பெற்றுள்ள கடன் விவரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்திலும் பொதுவெளியிலும் சமர்ப்பிக்கப் போவதாகக் கூறினார். நேர்மையான அரசியலை முன்னெடுப்பதால் இத்தகைய கடினமான பாதைகளைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால், டி.ஆர். பாலு தரப்பின் கோரிக்கையை ஏற்று அடுத்தகட்ட குறுக்கு விசாரணை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆர்.எஸ். பாரதி மீது அண்ணாமலை தொடர்ந்துள்ள வழக்கு மார்ச் 10-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்த சட்டப் போராட்டத்தின் மூலம் திமுகவிற்குப் பாடம் புகட்டுவோம் என அண்ணாமலை தனது பேட்டியை நிறைவு செய்தார்.