நடிகர் மனோஜ் உயிரிழப்பு- அண்ணாமலை, டிடிவி தினகரன் இரங்கல்

 
 அண்ணாமலை

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். நடிகரும், இயக்குனருமான இவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 48. மாலை 6 மணி அளவில் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இருக்கும்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அங்கேயே அவர் காலமானார். கடந்த  ஒரு மாதத்திற்கு முன்பு சிம்ஸ் மருத்துவமனையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பிறகு, வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து கொண்டு ஓய்வில் இருந்து நிலையில், கடந்த இரண்டு, மூன்று தினங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Image

மனோஜ் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான திரு. மனோஜ் பாரதி அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “திரைப்பட இயக்குனர் திரு.பாரதிராஜா அவர்களின் புதல்வரும், திரைப்பட நடிகருமான திரு.மனோஜ் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. திரு.மனோஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.