கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது அண்ணாமலை அல்ல - ஹெச்.ராஜா..

 
h

அதிமுக உடனான கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது மாநில தலைவரோ, நிர்வாகிகளோ அல்ல என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 
சென்னை அமைந்தக்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வரும் மே மாதம் 10ஆம் தேதி வரை கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருப்பேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன்” என்று தெரிவித்தார்.

Annamalai
 
அவரது பேச்சு மேடையில் இருந்த பாஜகவினருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேடையில் இருந்த வானதி ஸ்ரீனிவாசன் அப்போதே அண்ணாமலையின் பேச்சை திசை திருப்பினார்.  இது அண்ணாமலையின் கருத்து என நயினார் நாகேந்திரன்  தெரிவித்தார்.   இந்த நிலையில் கூட்டணி குறித்து முடிவு செய்வது மாநில தலைவர் அல்ல என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “கடந்த இரண்டு நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பற்றியோ,  ராஜினாமா என்று கூறியதோ அனைத்துமே பத்திரிகையாளர்களை சந்தித்து கூறாத விஷயங்கள். அவை கசிந்த வார்த்தைகளே தவிர அவர்கள் முறையாக கூறியது அல்ல. எனவே இதை பெரிதும் பொருட்படுத்த வேண்டாம்.
 ஹெச்.ராஜா
தொடர்ந்து, பாஜகவின் கூட்டணி பற்றியோ வேட்பாளர்கள் பற்றியோ மாநிலத் தலைவர்கள் முடிவு செய்ய முடியாது. கூட்டணி குறித்தும் வேட்பாளர்கள் குறித்தும் மத்திய பாஜக முடிவு தான் இறுதியானது. அதிமுக உடனான கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது மாநில தலைவரோ, நிர்வாகிகளோ அல்ல. இது குறித்து பாஜகவின் நாடாளுமன்றக்குழு மட்டுமே விவாதித்து முடிவு செய்யும்.   இப்போது எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி பூத் கமிட்டி உருவாக்கும் பணி மட்டுமே.  எனவே நாங்கள் அதை மேற்கொள்ள இருக்கிறோம். பாஜகவின் ஆதரவாளர்களும் சரி, தொண்டர்களும் சரி முழுமையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன்னதாக ஏதும் கட்டுக்கதைகளை பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்தார்.