“சீமானுக்கு சர்வதிகார எண்ணம்”- நாதகவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் திமுக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சீமானின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் பெரியார் குறித்த சீமானின் பேச்சு பிடிக்காமல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் நாதக வேட்பாளர்களும் விலகினர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து தருமபுரி மண்டல செயலாளர் அண்ணாதுரை விலகுவதாக அறிவித்துள்ளார். சீமான் நாளை தருமபுரி செல்ல இருக்கும் நிலையில் தருமபுரி மண்டல செயலாளர் அண்ணாதுரை கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.
இதுகுறித்து அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாம் தமிழர் உறவுகளுக்கு தர்மபுரி மண்டல செயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை வணக்கமுடன் தெரிவித்துக் கொள்வது. நமது தமிழினம் உலகெங்கிலும் பல்வேறு சொல்லோனா துயரங்களுக்கு ஆட்பட்டு இருந்தபோது நமது தேசிய தலைவர் உலகத்தில் எந்த தலைவரும் செய்யாத தியாகத்தை செய்து மூன்று தலைமுறைகளை போர்க்களத்தில் பலியிட்டு ஈழதமிழினம் அளிக்கப்பட்டபோது சீமான் அவர்களால் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய இயக்கம் தமிழ ர் நலனை காக்கவும் இயற்கை வளங்களை காக்கவும் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டது. எந்தவித விறுப்பு வெறுப்பும் இல்லாமல் எதார்த்தமான முறையில் இந்த சங்கதிகளை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கீழ்க்கண்ட காரணங்களுக்காக நான் நாம் தமிழர் கட்சியில் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதால் இந்த முடிவை நான் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.
1. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஜனநாயகம் இல்லாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். தலைமை ஒருங்கிணைப்பாளருக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் தானாக வெளியேறும் வகையில் அவருக்கு நிர்வாக ரீதியாக இடைஞ்சல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அளவிலான தலைவர் செயலாளர் ஆகியோருக்கும் மாவட்ட மண்டல செயலாளர்களுக்கும் பணம் திரட்டி தருவதை தவிர வேறு எந்த உரிமையும் இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் மண்டல செயலாளர் கொடுத்த நிர்வாகிகள் பட்டியல் அனுமதிக்கப்படாமல் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டது.
2. சாதாரண பிரச்சனைகளுக்கு எல்லாம் அறிக்கை தாக்கல் செய்யும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுமார் 75 குடும்பங்கள் வேலை இழந்து வறுமையில் வாடிய சூழ்நிலையில் நான் பலமுறை அறிவுறுத்தியும் பாலக்கோடு "ஹட்சன்* பால் தொழிற்சாலை ஊழியர்கள் பிரச்சனையை சரி வர கண்டுகொள்ளவில்லை.
3. கட்சியில் சட்டவிரோதமாக செயல்படுபவர்களை பற்றி அந்த பிரச்சனைகள் சம்பந்தமாக விசாரணை குழு அமைத்து தக்க விசாரணை செய்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற குறைந்தபட்ச இயற்கை நீதி கூட கட்சியில் கடைபிடிக்கவில்லை.
4. தமிழ் தேசியம் என்பதும் தலைவர் பிரபாகரன் பற்றியும் தானே உரிமையாளர் போலவும், மற்றவர்களை விருப்பமானால் கட்சியில் இருங்கள் இல்லாவிட்டால் கட்சியில் இருந்து போங்கள். என்ற ஏதே சர்வதிகாரம் கொண்ட செயல்கள் கட்சிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த சுமார் 200 க்கு மேற்பட்ட தலைவர்கள் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுவதற்கு சீமானே வழி வகுத்து விட்டார்.
5. தரூமபுரி மாவட்டத்தில் நாடாளு மன்றத் தேர்தலில் கட்சிக்காக உழைத்த ஆண், பெண் 20 பேர்களின் பட்டியலை தேர்தலில் போட்டி இடுவதற்காக அனுப்பி வைத்தோம். அவர்களை உதாசீனப்படுத்தி விட்டு இந்த மாவட்ட பிரச்சினைகளை சிறிதும் தெரியாத ஒரு பெண்ணை கொண்டு வந்து நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தியது.
6.காளியம்மாளை பொதுக்கூட்டத்திற்கு அழைத்ததை தலைமையை கேட்காமல் யாரையும் அழைக்க கூடாது என்று கண்டித்தது.
7. பொதுக்குழுவோ செயற்குழுவோ கூட்டி கட்சி நிர்வாகிகளின் குறைகளை எப்போதும் கேட்டதில்லை. உடன் இருக்கும் சில சமூக விரோதிகளின் பேச்சைக் கேட்டு தன்னிச்சையாக
முடிவெடுப்பது தன்னை சுற்றி நியாயமான நபர்களை ஏற்பாடு செய்து கொள்ளாதது.
8. இந்தக் கட்சிக்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர்களையும் வழக்குகளை எதிர்கொண்டவர்களையும் உதாசீனப்படுத்தியதுடன் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பாரிகாலன், மதுரை வெற்றிக்குமாரன், காளியம்மாள், ஜெகதீஷ் பாண்டியன், கிருஷ்ணகிரி பிரபாகரன், தென் சென்னை தியாகராஜன், இன்னும் தென் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தலைவர்களை அரவணைக்காமல் அவர்கள் குற்றம் செய்திருந்தால் விசாரித்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம். அவ்வாறு செய்யாமல் ஒரு தலைப்பட்சமான சர்வதிகார எண்ணத்துடன் வெளியேறும் படி செயல்படுவது.
9. தேசியத் தலைவர் தன் வாழ்க்கையை இந்த இன அவர்கள் விடுதலைக்காக அர்ப்பணித்திருக்கும்போது அவருக்கு இணையாக நாட்காட்டிகளிலும், மாத காட்டிகளிலும், தன்னுடைய படத்தையும் அவருக்கு இணையானவர் போல் காட்டுவது.
10. தன்னிடம் பேச்சாற்றலாலும் நினைவாற்றலாலும் இருப்பதால் அவசியம் அற்ற முறையில் சம்பந்தம் இல்லாத சங்கதிகளில் பேசி அதனால் பொது மக்கள் மத்தியில் அவபெயரை
சம்பாதித்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.