அண்ணா பல்கலை., மாணவிகளின் பாதுகாப்புக்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைப்பு
அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிகளின் பாதுகாப்புக்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும் வழக்கின் முதல் தகவல் அறிக்கை காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில் அண்ணா பல்கலைகழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிறப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிகளின் பாதுகாப்புக்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைகழகத்தில் ஏற்கனவே 140 செக்யூரிட்டிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 பேரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பணிகளுக்கு குழுக்கள் அமைத்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆணை பிறப்பித்துள்ளது.