செப்டம்பர் 1 அனிதா நினைவு தினம்: 'நீட் எதிர்ப்பு நாளாக' அனுசரிக்க மாணவர் அமைப்புகள் முடிவு!
அனிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தினத்தை ஒரு நினைவேந்தல் நிகழ்வாக கடைப்பிடிக்க தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு, முற்போக்கு மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து மேற்குறிப்பிட்ட மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளும், அனிதாவின் சகோதரர் மணிரத்னமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:
அனிதா மரணத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடந்த போது பிற மாநிலங்கள் அமைதியாக இருந்தன. ஆனால், இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழகத்தின் கோரிக்கையாக இருக்கிறது.
மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் போராட்டங்களுக்கு பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அனிதா உயிரிழந்த நாளான செப்டம்பர் 1 ஆம் தேதி, நீட் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கும் வகையில், பெசன்ட் நகர் கடற்கரையில் மாலை 5 மணி அளவில் மிகப்பெரிய நினைவேந்தல் நிகழ்வை நடத்தப் போகிறோம். இந்த நிகழ்வில் அனைத்து மாணவ அமைப்புகளையும் ஒன்றிணைக்க உள்ளோம்.
நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்திற்கு உடன் நிற்கும் திரையுலகைச் சேர்ந்தவர்களையும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம். பாஜக, ஆர்எஸ்ஸ் தவிர, பிற அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.
நீட் தேர்வு ஒழிப்பு தொடர்பாக மாநில அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். மாபெரும் மக்கள் போராட்டம் மூலம் தான் மத்திய அரசை இந்த விவகாரத்தில் பணிய வைக்க முடியும்" என அவர்கள் கூறினர்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவியான அனிதா, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நீட் நுழைவுத் தேர்வில் குறைவான கட் ஆப் பெற்றதால் அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தியும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி அனிதா தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

