தேவதூதர் விஜய், மாரியம்மன் ஜோதிமணி... கரூரில் சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!
கரூர் மாவட்டத்தில் கோவில்களுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 84 ஏக்கர் இனாம் நிலங்கள் தொடர்பான அறநிலையத் துறை உத்தரவை வரவேற்று, காங்கிரஸ் நிர்வாகி பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அதில், முதலமைச்சர் விஜய்க்கும், கரூர் எம்.பி. ஜோதிமணிக்கும் புகழாரம் சூட்டும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த வாசகங்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, இந்த போஸ்டர் கரூர் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி பெயரில் ஒட்டப்பட்டதாகக் கூறப்படும் நன்றி தெரிவிக்கும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், "கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து மக்களின் நீண்டகால கனவை நனவாக்கிய கர்த்தரின் தேவதூதராகிய முதல்வர் ஜோசப் விஜய்" என்றும், "கரூர் மக்களின் இதயங்களில் மாரியம்மனாக வாழும் எம்.பி. ஜோதிமணி" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வாசகங்களுக்கு எதிராக பா.ஜ.க. மற்றும் சில இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கோவில் நிலம் தொடர்பான விவகாரத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் இந்த போஸ்டர் குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் பரவி வருகின்றன.
மறுபுறம், இந்த போஸ்டர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமையோ அல்லது எம்.பி. ஜோதிமணியோ அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. அதேபோல், இந்த போஸ்டரை யார் அச்சிட்டு ஒட்டினர், அது கட்சியின் அதிகாரப்பூர்வ நடவடிக்கையா அல்லது தனிநபர் முயற்சியா என்பதும் தெளிவாகவில்லை.

