தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை' படத்தின் செட்டில் தீ விபத்து

 
ச் ச்

ஆண்டிபட்டி அருகே  நடிகர் தனுஷ் புதிதாக இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஆண்டிபட்டி அருகே அமைக்கப்பட்டிருந்த செட்டில்  படப்பிடிப்பு முடிந்த நிலையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  


நடிகர் தனுஷ் புதிதாக இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் இட்லி கடை. நடிகை நித்யா மேனன் மற்றும் நடிகர்கள் சத்யராஜ் , ராஜ்கிரன், பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்து வருகிற இப்படத்தை அக்டோபர் இரண்டாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதற்கான படப்பிடிப்பு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள போடிதாசன்பட்டி விலக்கு பகுதியில் ஒரு தெரு போன்று புதிதாக செட் அமைக்கப்பட்டு அதில் இரண்டுபுறமும்  கடைகளைப்போன்று அமைக்கப்பட்டு முதல் கட்டமாக கடந்த மாதம்  20 நாட்களாக ஏற்கனவே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 

இதையடுத்து தற்போது படப்பிடிப்பு குழு வேறு பணிகளில் வேறு பகுதியில் இருக்கும் நிலையில், போடிதாசன்பட்டி விலக்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் திடீரென தீ பற்றி ஒரு பக்கம் முழுவதும் எரிந்தது. தீ மளமளவென பரவியதால் புகைமூட்டம் ஏற்பட்டு ஆண்டிபட்டி ஏத்தகோவில் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். தீ பரவியதை பார்த்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறை மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் வரை போராடி தீயை அணைத்த நிலையிலும் மரம் பிளைவுட்டுகளால் அமைக்கப்பட்ட செட்டின்  ஒருபகுதி முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.