இந்திய விண்வெளி வரலாற்றில் இந்நாள் பொன்னாள்- அன்புமணி ராமதாஸ்
நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3, இந்திய விண்வெளி வரலாற்றில் இந்நாள் பொன்னாள் மகிழ்ச்சி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் இந்தியா கால் பதித்தது. நிலவில் இந்தியா கால் பதித்திருப்பதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3 : இந்திய விண்வெளி வரலாற்றில் இந்நாள் பொன்னாள் - மகிழ்ச்சி!!! ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து ஜூலை 14-ஆம் நாள் வெண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பிறகு இன்று மாலை நிலவில் தரையிறக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்துள்ள முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த நாள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் பொன் நாள். இந்த வரலாற்று சாதனையை படைத்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாராட்டுகள். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.