மது விற்பனை, சினிமா ஆகிய 2 துறைகள் மட்டும் வளர்ந்துள்ளது- அன்புமணி ராமதாஸ்

 
anbumani

காவேரி ஆற்றில் அணை கட்ட ஒன்றிய பாஜக அரசு  எடுத்த முயற்சியை அவர்களே கை நிறுத்துவார்கள்  என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

anbumani

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுசேரி, புதுப்பாக்கம், கேளம்பாக்கம், மாம்பாக்கம், பனங்காட்டுபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாமக கட்சி கொடிகளை  ஏற்றிவைத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருகாச்சூர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் காயர் ஏழுமலை, ஜானகிராமன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியான 12 ஆம் வகுப்பு தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் மிக மிக குறைவான தேர்ச்சியே பதிவாகியிருந்தது. இப்போது மட்டும் அல்ல 15 ஆண்டுகளாகவே இதே நிலை தான். இதுபோல் அங்கு பொருளாதாரம், தனி மனித வருவாய் குறைவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளது, ஆனால் மது விற்பனை அதிகம் நடைபெறுகிறது. இதனால் அரசு சிறப்பு திட்டங்களை அமுல்படுத்தி அப்பகுதியில் கல்வி, வேலை வாய்ப்பு அளித்திட வேண்டும். அதனால் தான் பாமக வன்னியர்களுக்கு 10.5 சதவீகித இட ஓதுக்கீடு கேட்டோம். ஆனால் உச்சநீதிமன்றம் தடையில்லை, தரவுகளின் அடிப்படையில் கொடுக்கலாம் என கூறியுள்ளது.

இதேபோல் கல்வி உள்ளிட்டவைகளில் பின் தங்கியுள்ளதை பாமக நிறுவனர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார். விரைவில் தமிழ்நாடு அரசு 10.5 சதவீகித இட ஓதுக்கீடு வழங்கிட வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவுகளை பொருத்தவரையில் தமிழகத்திற்கு நலன் எனலாம், காவேரி ஆற்றில் மேகதாது அணை கட்ட ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கைகள் எடுத்த நிலையில் தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால் அவர்களுக்கு நல்ல பெயர் செல்லாமல் இருக்க ஒன்றிய பாஜக அரசே  நிறுத்திவிட கூடும் என நினைக்கிறேன், அதனால் தமிகத்திற்கு நலன். 

தமிழகத்தில் 55 ஆண்டுகளாக மக்கள் மிக பொறுமையாக உள்ளனர், மது விற்பனை, சினிமா ஆகிய இரண்டு துறைகள் மட்டும் வளர்ந்துள்ளது, கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருக்க அதனை காவல்த்துறை ஏன் தடுக்கவில்லை? அல்லது தெரிந்தே நடந்துள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினார்.