அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையேற்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

 
anbumani anbumani

காவிரி நீர் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையேற்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Approach Supreme Court on Cauvery issue: Anbumani Ramadoss urges TN govt

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது என்று  கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கக் கூடிய, காவிரியில் தமிழகத்தின் உரிமையை பறிக்கக் கூடிய செயலை செய்வதற்கான கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையே அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையேற்று நடத்துகிறார். அனைத்துக் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உழவர் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை அழைத்து கலந்தாய்வு நடத்துகிறார்.

அதேபோல், தமிழ்நாட்டிலும் காவிரி பிரச்சினை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றால் தான் அதற்கு முக்கியத்துவம் கிடைக்கும். காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடத்தபட்டால் தான் காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எவ்வளவு  உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்திற்கும் மற்றவர்களுக்கும் காட்ட முடியும். எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும்; தமிழகத்தின் 5  கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் போன்ற நோக்கங்களைக் கருத்தில் கொண்டு  அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று நடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.