தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் - அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டாமல் வேடிக்கைப் பார்க்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளவங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்களுக்கு உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் தான் தமிழக மீனவர்கள் 4 பேருக்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறைதண்டனை அளித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர்களின் தண்டனையை ரத்து செய்யாத சிங்கள அரசு, இலங்கை சிறைகளில் சில வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த 18 மீனவர்களை விடுதலை செய்தது. அவர்கள் விமானம் மூலம் சென்னை வந்ததற்கு அடுத்த நாளே 22 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருப்பதை சகித்துக் கொள்ள முடியாது.
இலங்கை அரசு இந்தியாவிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொள்கிறது. இன்னொருபுறம் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறல்களை கட்டவிழ்த்து விடுகிறது. அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் ஆகும். இலங்கையின் இந்த சீண்டல்களை இந்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டதற்கு
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 10, 2024
கண்டனம்: சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு
முடிவு கட்டாமல் வேடிக்கைப் பார்க்கக் கூடாது!
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை சிங்களக்…
40 ஆண்டுகளாகத் தொடரும் சிங்களைக் கடற்படையினரின் அத்துமீறல்களைத் தடுக்கவும், மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும், இலங்கை அரசால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.