நெல்லை அண்ணா பல்கலை. முதுகலை படிப்பை நிறுத்துவது நியாயமில்லை.- அன்புமணி ராமதாஸ்..

 
எட்டு வழிச்சாலை திட்டம் ரத்து; பாமக, விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி-அன்புமணி ராமதாஸ்!

நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகள் நிறுத்தப்பட்டது கவலையளிப்பதாக  பாமக எம்.பி., ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நெல்லை அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் கடந்த 3 ஆண்டுகளாக  மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.  இதனால்  நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகள் நிறுத்தம் செய்யப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தென்மாவட்ட மாணவர்களிடையே  கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  

நெல்லை அண்ணா பல்கலை.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு கவலையளிப்பதாக பாமக எம்.பி., ராமதாஸ்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த முதுநிலை பொறியியல் படிப்புகள்  நிறுத்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்திருப்பது  கவலையளிக்கிறது. இது உயர்கல்வி வாய்ப்புகளை பறிக்கும் செயலாகும்.

அன்புமணி ராமதாஸ்

நெல்லை வளாகத்தில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால் தான் இந்த முடிவை எடுத்ததாக அண்ணா பல்கலை. கூறுவதை  ஏற்க முடியாது. மாணவர் சேர்க்கை இல்லாததை காட்டி பள்ளிகளையே மூடக்கூடாது என வலியுறுத்தப்படும் சூழலில் பல்கலை. படிப்புகளை நிறுத்துவது எந்த வகையில் நியாயம்?. மாணவர் சேர்க்கை குறையும் பட்சத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமளிக்கும் புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குவது தான் சரியான செயலாக இருக்கும். மாறாக, இருக்கும் படிப்புகளை நிறுத்துவது அண்ணா பல்கலைகழகத்திற்கு அழகு அல்ல.

நெல்லை வளாகத்தில் முதுநிலை படிப்புகள் நிறுத்தப்பட்டால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிக்க சென்னை அல்லது கோவைக்கு செல்ல வேண்டும். அதை தவிர்க்க  நெல்லையில் முதுநிலை படிப்புகள் தொடர வேண்டும். “ என்று குறிப்பிட்டுள்ளார்.