ராமதாஸ் படம், பெயரை அன்புமணி தரப்பு பயன்படுத்த தடை..!
பாமகவில் தந்தை ராமதாசுக்கும் மகன் அன்புமணி ராமாதசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக் கோரியும் பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை 13-ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், அன்புமணி பாமகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும், தனக்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பாமக தலைவராக அன்புமணி சட்ட விரோதமாக நீடித்து வருகிறார் என்றும், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி தரப்பு வெற்றி பெறுவதற்கு தனது பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதனால், தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய பெயர், புகைப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்ம பிரபு, அன்புமணி தரப்பை சேர்ந்த 18 வேட்பாளர்களும், தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தர்மபிரபு, அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு வரும் காலத்திற்கும் பொருந்தும் என்று தெரிவித்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் மாதம் 04-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

