"அந்த லூசு அண்ணாசாலைக்கு வந்துட்டேன் பாருனு போட்டோ போடும்"- அண்ணாமலையை விமர்சித்த அன்பில் மகேஷ்

கட்சிக்காகவோ, அண்ணா அறிவாலயத்தை புதிதாக கட்டுவதற்காகவோ நிதிகேட்கவில்லை, பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்காகத்தான் நிதி கேட்கிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்வி கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தேசிய கல்விக் கொள்கையில் மொழிதான் முக்கியப் பிரச்சினை. அதன் பின்பு பல்வேறு விஷயங்கள் மறைமுகமாக உள்ளன. விஷ்வகர்மா திட்டத்தை பொதுத்தேர்வுகளாக நடத்தி மறைமுகமாக பள்ளியிலேயே குலத்தொழிலை மறைமுகமாக புகுத்துகின்றனர். மரு வைத்துக் கொண்டு வருவார்கள், மறைமுகமாக வருவார்கள். சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். சமஸ்கிருதத்தை வளர்க்க 1,700 கோடி ஒதுக்குகிறார்கள். செம்மொழியான தமிழுக்கு 6 கோடிதான் ஒதுக்குகின்றனர். மொழிக் கொள்கை மூலம் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயல்கின்றனர். 56 மொழிகளை இந்தி மொழி விழுங்கி உள்ளதாக தரவுகள் கூறுகிறது. இதன்மூலம் இந்தி மொழியை தேசிய மொழியாக அறிவித்துவிடலாம் என்கிற நோக்கில் செயல்படுகின்றனர்.
நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது அதுகுறித்து சிந்திக்காமல் மத்திய அரசு உள்ளது. பாஜகவிற்கு அதானி அம்பானிதான் முக்கியம். பணக்காரர்களை கையில் வைத்துக் கொண்டு தான் நினைப்பதை செய்துவிடலாம் என நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் நுழைய முயற்சி செய்கிறார்கள். அண்ணா தமிழன் என்பதால் மட்டும் தமிழை உயர்த்தி பிடிக்கவில்லை. பகுத்தறிவுவாதியாக சமஸ்கிருதத்தையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு தமிழை உயர்த்திப் பார்த்தவர் அண்ணா. போர்களங்கள்தான் தளபதியை உருவாக்கும். அப்படி உருவாக்கப்படுகிற தளபதியாக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். நமது கருத்துகளுக்கு அநாகரிகமான முறையில் பதிலளிக்க கூடியவர்கள் உள்ளனர். தன் கேள்விகளுக்கு பதிலளிப்பதால், தன்னிடம் தரவுகள் இல்லாமல், ஒரு தலைவராக அமரவைத்துவிட்டு அனைவரும் கொட்டுக் கொட்டு என்று கொட்டுகிறார்களே என்கிற அச்சம் வந்துவிட்டதால், என்ன பேச வேண்டும் என்றே தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்.
துணை முதலமைச்சர் அண்ணாசாலைக்கு வந்து பாரு என்றுக் கூறியதால், எப்படியும் அந்த லூசு அண்ணாசாலைக்கு வந்து புகைப்படம் எடுத்துவிட்டு அண்ணாசாலைக்கு வந்துவிட்டேன் பாரு என்றுக் கூறலாம். அப்படி வந்தாலும், பரவாயில்லை நாம் கூறுவதெல்லாம் கேட்கிறார், அதனால் அவரை அப்படியே தராத நிதியையும் வாங்கி வரக் கூறுங்கள். அவரால் அண்ணாசாலைதான் வரமுடியும் நிதியெல்லாம் பெற்றுத் தரமுடியாது. கட்சிக்காகவோ அண்ணா அறிவாலயத்தை புதிதாக கட்டுவதத்காக நிதிகேட்கவில்லை, பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்காகத்தான் அதனை கேட்கிறோம்” என்றார்.