மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க வந்த முதியவர் மாடு முட்டி பலி

 
144 தடையிலும் நடந்த மஞ்சுவிரட்டு..படுகாயம் அடைந்த காவலர்!

மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முதியவர் மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மஞ்சுவிரட்டு போட்டியில் ‘மாடு முட்டி’ 2 பேர் மரணம்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள செம்மணிபட்டியில் ஆண்டி பாலகர் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே வயல்வெளியில் அவிழ்த்து விடப்பட்ட இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஆங்காங்கே கண்மாய் மற்றும் வயல்வெள்ளிகளில் நின்று காளைகளை மடக்கிப் பிடித்தனர். செம்மணிபட்டியின் காவல் தெய்வமாக விளங்கும் ஆண்டி பாலகர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூசத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 16ஆம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கிய இத்திருவிழாவில் தைப்பூச தினத்தன்று பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. 

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சுவிரட்டு போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் கொடுக்கம்பட்டி, சருகுவளையப்பட்டி, கீழவளவு, கீழையூர், தும்பைபட்டி, வெள்ளலூர், உறங்கான்பட்டி, அம்பலகாரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட காளைகள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துரத்தி பிடித்து மடக்கினர். இந்த மஞ்சுவிரட்டு போட்டியினை காண உள்ளூரில் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு மகிழ்ந்தனர். இந்நிலையில் வேடிக்கை பார்த்த வெள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் (60) என்பவரை காளை ஒன்று முட்டியதில் படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முதியவர் சந்திரன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கீழவளவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.