‘நான் இன்னும் சாகல’... இறந்ததாக கருதி மயானத்திற்கு கொண்டு சென்ற மூதாட்டி உயிருடன் எழுந்ததால் பரபரப்பு
மணப்பாறை அருகே இறந்ததாக கருதி மயானத்திற்கு கொண்டு சென்ற மூதாட்டி உயிருடன் இருந்ததால் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியை அடுத்த சுரக்காய்பட்டியைச் சேர்ந்த பம்பையன் மனைவி சின்னம்மாள் (வயது 60). இவர் கடந்த 16.11.2024 ம் தேதி பூச்சி மருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமனதால் உறவினர்கள் இன்று வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அந்தப் பெண்மணி இறந்ததாக கருதி உறவினர்கள் சுடுகாட்டில் இறுதி சடங்கிற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட இருந்த நிலையில் சின்னம்மாள் திடீரென கண் விழித்ததால் அருகில் இருந்த உறவினர்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சின்னம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார். சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்ய இருந்த பெண் கண்விழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.