சேலத்தையே உலுக்கிய சம்பவம்.. ஏற்காடு பள்ளத்தில் கிடந்த சிறுமி! யார் அந்தப் பெண்? போலீஸ் வெளியிட்ட முக்கிய நோட்டீஸ்!
சேலம் மாவட்டம் ஏற்காடு கொட்டச்சேடு - குப்பனூர் மலைப்பாதையில் வழுக்குப்பாறை அருகே மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சிறுமியின் சடலத்தை அடையாளம் காண ஏற்காடு காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடி நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
நவம்பர் 26, 2026 அன்று காலை ஏற்காடு - குப்பனூர் மலைப்பாதையில் கொட்டச்சேடு (வழுக்குப்பாறை) அருகே சாலையோரப் பள்ளத்தில் கிடந்த சிறுமியின் உடலை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்துக் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
உயிரிழந்த சிறுமிக்குச் சுமார் 12 முதல் 15 வயது வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டபோது அவர் கவுன் (frock) மற்றும் ஸ்வெட்டர் அணிந்திருந்தார்.
சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுமியைக் கொலை செய்து இங்கு வீசிச் சென்றார்களா என்ற கோணத்தில் ஏற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மட்டுமின்றி நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் காணாமல் போன சிறுமிகள் குறித்த புகார்களையும் காவல்துறையினர் ஒப்பிட்டுச் சரிபார்த்து வருகின்றனர்.
சிறுமி குறித்த ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக ஏற்காடு காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

